சீன அதிபர் ஜின்பிங், பிரதமர் மோடி சந்திப்பு நிகழ்ச்சியில் வரவேற்பு பேனர்கள் வைக்க நீதிமன்றத்தின் அனுமதியை தமிழக அரசு கோரியிருந்த நிலையில் மக்களுக்கு பாதிப்பின்றி வரவேற்பு பேனர்கள் வைக்க நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
விதிமீறி பேனர்கள் வைக்க கூடாது என்று ட்ராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கில் அரசியல் கட்சிகள் விதிகளை மீறி பேனர்கள் வைக்க கூடாது என்றும், அரசியல் கட்சிகள் விதி மீறி பேனர்கள் வைக்கமாட்டோம் என்ற உத்திரவாதத்தை தமிழக அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும் என்றும் கடந்த டிசம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் தனியார் ஐ.டி பெண் ஊழியர் சுபஸ்ரீ பேனர் சரிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து. அது தொடர்பான வழக்கிலும் பேனர் கலாச்சாரத்திற்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் வரும் 11ஆம் தேதி மாமல்லபுரத்தில் இந்தியா, சீனத் தலைவர்கள் இருவரின் சந்திப்பு நடைபெறவிருக்கின்ற நிலையில் சென்னை விமானநிலையம் முதல் மாமல்லபுரம் வரை 16 பேனர்கள் வைக்க நீதிமன்றத்தில் தமிழக அரசு அனுமதி கோரியிருந்தது.
இந்த வழக்கின் விசாரணையில் திமுக மற்றும் ட்ராபிக் ராமசாமி தரப்பில் கடும் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. இந்த சந்திப்பு நிகழ்ச்சியை வரவேற்கிறோம் ஆனால் பேனர் வைத்துதான் வரவேற்க வேண்டுமா பாரம்பரிய முறைப்படி வரவேற்கலாமே என வாதிடப்பட்டது.
விதியை மீறி பேனர் வைக்கக்கூடாது என கூறியது அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே என வாதடிய தமிழக அரசு, அரசு சார்பில்தான் பேனர் வைக்கப்படுகிறது அரசியல் கட்சிகள் பேனர் வைக்க அனுமதிக்கமாட்டோம் என உறுதியளித்தது.
இதனையடுத்து பேனர் வைக்க அனுமதி கோரி அரசு நீதிமன்றத்தில் மனுவை முன்வைக்கவில்லை டிசம்பர் மாதம் கேட்கப்பட்டிருந்த உத்திரவாதத்தின் அடிப்படையில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், 16 பேனர்களை வைக்க இருப்பதாக அந்த மனுவில் நீதிமன்றத்திற்கு தகவலாக அரசு தெரிவித்திருப்பதாகவும் கூறிய நீதிபதிகள், பொதுமக்களுக்கு பாதிப்பின்றி, இடையூறின்றி பலமான கட்டமைப்புகளுடன் வரவேற்பு பேனர்கள் வைக்க தமிழக அரசுக்கு அறிவுறுத்தல் செய்தனர்.