Skip to main content

காவல் துறையில் ‘ஓர் கொம்பன்’; சிக்கிய கும்பல்!

Published on 16/05/2023 | Edited on 16/05/2023

 

mobile police surveillance vehicle was identified and arrested
கோப்புப்படம்

 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ கெங்கை அம்மன் சிரசு திருவிழா உலக பிரசித்தி பெற்றது. வைகாசி மாதம் முதல் நாள் நடைபெறும் இத்திருவிழாவில் உள் மாவட்டம், வெளி மாவட்ட மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவர். இதற்காக பக்தர்களை கட்டுப்படுத்த 1200 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  

 

காவல் துறை குற்றச்சம்பவங்களை தடுப்பதற்காக மனித ஆற்றலை மட்டுமே பயன்படுத்துவதை தவிர்த்து பல்வேறு விதமான தொழில்நுட்ப வசதிகளையும் பயன்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழகத்திலேயே முதல் முறையாக அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட "நடமாடும் காவல் கட்டுப்பாட்டு மைய வாகனத்தை" அண்மையில் தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு துவக்கி வைத்தார். இவ்வாகனம் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் கூடும் விழாக்கள், முக்கியத் தலைவர்களின் நிகழ்ச்சிகள், மிகப்பெரிய ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் உள்ளிட்ட இடங்களில் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது.  

 

இந்நிலையில் குடியாத்தத்தில் நடைபெற்று வரும் சிரசு திருவிழாவில் லட்சக்கணக்கான மக்கள் சாமியை தரிசித்து வருகின்றனர். இங்கும் வேலூர் மாவட்ட காவல்துறையினரின் நடமாடும் காவல் கட்டுப்பாட்டு மைய வாகனம் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டது. இவ்வாகனம் மூலம் திருவிழாவை வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் கண்காணித்து வந்த போது சுமார் அரை கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள காமராஜர் மேம்பாலத்திற்கு அடியில் நடமாடிய சில நபர்களின் போக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து வாகனத்தில் இருந்தபடியே கேமரா மூலம் கண்காணிக்கும் போது அங்கு சிலர் மது அருந்துவதும் மது விற்பனையில் ஈடுபடுவதும் தெரிய வந்தது. இதனை அடுத்து அங்கு விரைந்து சென்ற தனிப்படை காவலர்கள் அங்கு சட்ட விரோதமாக அரசு மதுபானத்தை விற்பனை செய்து கொண்டிருந்த மூன்று பேரை கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து சுமார் 600 டாஸ்மார்க் மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக குடியாத்தம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைதான மூன்று பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 

சட்டவிரோத மது விற்பனையை கண்டுபிடிக்க உதவிய "நடமாடும் காவல் கட்டுப்பாட்டு மைய வாகனம்" குறித்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறுகையில், “இந்த நடமாடும் காவல் கட்டுப்பாட்டு மையத்தில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளது. இதில் 6 மெகாபிக்சல் மொபைல் கேமரா நான்கும், 8 மெகாபிக்சல் மொபைல் சிசிடிவி கேமரா நான்கும், ஒன்றரை மீட்டர் உயர்ந்து 360 டிகிரியையும் கண்காணிக்கும் ஒரு டோம் கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த 360 டிகிரி டோம் கேமரா சுமார் அரை கிலோமீட்டருக்கு அப்பால் உள்ளதையும் துல்லியமாகக் கண்காணிக்கும், அதேசமயம் பழைய குற்றவாளிகளின் முகத்தையும் தெளிவாக ஸ்கேன் செய்து காட்டிக்கொடுக்கும். இது இரவிலும் சிறப்பாக வேலை செய்யும்.  

 

அதேபோல 8 மெகாபிக்சல் கேமராவை பொறுத்தவரை ஒரு பெரும் கூட்டத்துக்கு மத்தியில் இந்த வாகனத்தை இயக்கிச் செல்லும்போது மூவிங்கிலேயே முகத்தை தெளிவாக ஸ்கேன் செய்து குற்றவாளிகளைக் காட்டிக்கொடுக்கும். இதன் அத்தனை செயல்பாடுகளும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தலைமை கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டிருக்கும். அங்கிருந்தும் இதனை கண்காணித்து குற்றச்செயல்களைத் தடுக்க முடியும். அந்த வகையில் தான் தற்போது சுமார் அரை கிலோமீட்டருக்கு அப்பால் சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்ட மூன்று பேரை கைது செய்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளோம். இந்த நடமாடும் காவல் கட்டுப்பாட்டு மையம் பெரும் கூட்டம் திரளும் இடங்களில் குற்றச்சம்பவங்களைத் தடுக்க காவல்துறையினருக்கு பேருதவியாக இருந்து வருகிறது. ஒரு 40 காவலர்களை குறிப்பிட்ட சுற்றளவில் உயரமான கட்டிடங்களின் மீது பாதுகாப்பு பணியில் ஈடுபடச் செய்து கண்காணிப்பதை இந்த ஒரே வாகனம் செய்து முடிக்கிறது” எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்