Skip to main content

பொதுவெளியில் அவமானப்படுத்தியதால் வந்த வினை! விவசாயி அடித்து கொலை!

Published on 18/04/2022 | Edited on 18/04/2022

 

Farmer passed away police arrested one

 

கிருஷ்ணகிரி அருகே, பலர் முன்னிலையில் அடித்து அவமானப் படுத்தியதால் விவசாயியை அடித்துக் கொலை செய்த டேங்கர் லாரி ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்தனர்.


கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அருகே உள்ள நாரணிகுப்பத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மனைவி சுமித்ரா (37). இதே ஊரைச் சேர்ந்தவர் நரசிம்மன் (40). டேங்கர் லாரி ஓட்டுநர். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு நரசிம்மன், சுமித்ராவிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதையறிந்த சுமித்ராவின் உறவினர்கள் அவரை கண்டித்துள்ளனர். குடிசாதனப்பள்ளியைச் சேர்ந்த அவருடைய உறவினரான விவசாயி திம்மராஜ் என்பவர் நரசிம்மனை தாக்கியுள்ளார். 


இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை (ஏப்.14) மாலை, நாரணிகுப்பத்தில் இருந்து திம்மராஜ் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அந்தப் பகுதியில் உள்ள ஜவுளி நிறுவனம் அருகே சென்று கொண்டிருந்தபோது, கார்மெண்ட் நிறுவனம் அருகே சென்று கொண்டிருந்தபோது, திம்மராஜை தடுத்த நிறுத்திய நரசிம்மன், எப்படி என்னை அடிக்கலாம் என கேட்டு தகராறில் ஈடுபட்டார். 


அப்போது அவர்கள் இருவருக்குள்ளும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த நரசிம்மன், அங்கிருந்த கட்டையை எடுத்து திம்மராஜை சரமாரியாக தாக்கினார். இதில் அவருடைய தலையின் பின்பக்கத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் அவர் மயங்கி விழுந்தார். அலறல் சத்தம் கேட்டு சிலர் ஓடிவருவதைப் பார்த்த நரசிம்மன் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார். அந்த வழியாக வந்தவர்கள் திம்மராஜை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 


இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து குருபரப்பள்ளி காவல்நிலைய ஆய்வாளர் அன்புமணி வழக்குப்பதிவு செய்து, நரசிம்மனை கைது செய்தார். விசாரணையில், ''திம்மராஜ் ஊர் மக்கள் முன்னிலையில் என்னை தாக்கி அவமானப்படுத்தினார். சம்பவத்தன்று இதுகுறித்து கேட்டபோதும் அவர் ஆபாசமாக பேசினார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் அவரை கட்டையால் தாக்கினேன். அவர் மயங்கி விழுந்ததால் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டேன். அவர் இறந்து போவார் என்று நான் நினைக்கவில்லை'' என்று நரசிம்மன் தெரிவித்துள்ளார். 


இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு, கிருஷ்ணகிரி சிறையில் அடைத்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்