சென்னையிலிருந்து சுமார் 70 கிலோமீட்டரும், காஞ்சிபுரத்திலிருந்து 15 கிலோமீட்டரும் தூரம் கொண்ட பரந்தூரில் இந்த புதிய இரண்டாவது விமான நிலையம் அமைய இருக்கிறது. பரந்தூர் மட்டுமல்லாது அதனைச் சுற்றியுள்ள சில கிராமங்களிலிருந்தும், நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பரந்தூர் மக்களின் எதிர்பார்ப்பானது விளை நிலங்களைக் கையகப்படுத்தக் கூடாது, அதேபோல் பூர்வ குடிகளாக இருக்கும் தங்களுடைய வீடுகளையோ, மனைகளையோ எந்த வகையிலும் பாதிக்காத அளவில் விமான நிலையம் வர வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.அண்மையில் சுற்றுவட்டார கிராம மக்கள்' விவசாயத்தை அழித்து விமான நிலையமா?' என்ற பதாகைகளுடன் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரந்தூர் பகுதிக்கு நேரடியாக சென்று மக்களை சந்தித்தார்.
ஏகனாபுரத்தில் 13 கிராம மக்கள் ஒன்று திரண்டு ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பு நிகழ்வில் பங்கேற்று அம்மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, கோரிக்கைகளைக் கேட்டறிந்தார். விளைநிலங்களை அழித்து புதிய வானூர்தி நிலையம் அமைக்கும் முடிவை அரசு திரும்பப்பெறும் வரை தொடர்ச்சியாக போராடுவோம் என்றும் தெரிவித்தார்.