கடலூரில் நடமாடும் கருக்கலைப்பு மையம் செயல்பட்டதாகப் புகார் எழுந்த நிலையில், இது தொடர்பாகப் போலீசார் 4 பேரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் ஏற்கனவே சட்ட விரோதமாகக் கருக்கலைப்புகளில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த கழுதூர் என்ற கிராமத்தில் நடமாடும் வகையில் கருக்கலைப்பு மையம் செயல்பட்டதாக புகார்கள் எழுந்தன. அந்தப் பகுதியில் உள்ள ஓம் சக்தி மெடிக்கலில் கருவில், இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என ஸ்கேன் மூலம் சட்ட விரோதமாகத் தெரியப்படுத்தப்படுவதாகவும் கருக்கலைப்பில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியானது.
உடனடியாக வேப்பூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் அகிலன் மற்றும் காவல்துறையினர் அந்த மெடிக்கலுக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு நடத்தப்பட்ட ஆய்வில் ஸ்கேன் செய்ய பயன்படுத்தப்படும் கருவி மற்றும் கருக்கலைப்புக்கு பயன்படுத்திய மருந்துகள் ஆகியவை இருந்தன. மெடிக்கலின் உரிமையாளரான மணிவண்ணன் மற்றும் அந்த மெடிக்கலில் மருந்தாளுநராக பணிபுரிந்த கௌதமி, இடைத்தரகர்கள் தினேஷ், கண்ணதாசன் ஆகிய நான்கு பேரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.
இவர்கள், சம்பந்தப்பட்ட நபர்கள் வீட்டுக்கே சென்று கருக்கலைப்பில் ஈடுபட்டதாகப் புகார்கள் எழுந்த நிலையில், நடமாடும் வகையில் கருக்கலைப்பு மையம் செயல்பட்டதா என்பது தொடர்பாக விசாரணை தீவிரமடைந்துள்ளது.