சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள முத்துநாயக்கன்பட்டியில் பள்ளி, குடியிருப்பு, வாரச்சந்தை உள்ளிட்டவை இருக்கக்கூடிய இடத்தில் டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வந்தது. கடையை மூட பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் வைக்கப்பட்டது. ஆனால் அந்தக் கடை தொடர்ந்து செயல்பட்டு வந்தது. கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என முத்துநாயக்கன்பட்டி, பாகல்பட்டி, பச்சனம்பட்டி, செல்லப்பிள்ளைக்குட்டை உள்ளிட்ட நான்கு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை அந்த கடைக்குச் சென்ற சட்டமன்ற உறுப்பினர் அருள், போராடிக்கொண்டிருந்த பொதுமக்கள் முன்னிலையில் டாஸ்மாக் கடை ஊழியர்களின் காலில் விழுந்து, ''கடைய மூடுங்க... கெஞ்சிக் கேட்டுக்கிறேன்... வேற இடத்துக்கு மாத்திடுங்க... ரொம்ப அசிங்கமா இருக்குதய்யா....'' என்று கூறி கடையை மூடும் படி கேட்டுக்கொண்டார். அதனையடுத்து அந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டது. நேற்றும் கடையானது மூடப்பட்டது. இதேபோல் சிவதாபுரம், புதுரோடு உள்ளிட்ட இடங்களிலும் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.