புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகில் உள்ள கவரப்பட்டி கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு செல்லும் மாணவிகள் அப்பகுதியில் கஞ்சா போதை இளைஞர்களால் தங்களுக்கு தொந்தரவு ஏற்படுவதாக அதே பகுதியைச் சேர்ந்த பார்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளி சங்கரிடம் கூறியுள்ளனர்.
மாணவிகளின் நலுனுக்காக சங்கர் 100 என்ற காவல் உதவி எண்ணுக்கு தகவல் கொடுத்துள்ளார். இந்த தகவலை அடுத்து அவரை தேடி வந்த விராலிமலை போலீசார் அங்கிருந்து காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று கடுமையாக தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.
இந்த சம்பவம் வழக்கறிஞர் பழனியப்பனுக்கு கிடைக்க பேருந்து நிலைய நிழற்குடையில் கிடந்த சங்கரை பார்த்து சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். தொடர்ந்து சங்கரிடம் பெறப்பட்ட வாக்குமூலம் திருச்சி ஐஜி பாலகிருஷ்ணன் உள்ளிட்ட காவல் அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பியிருந்தார். இந்த நிலையில் விராலிமலை காவல் நிலையத்தை சேர்ந்த சங்கரை தாக்கிய செந்தில், பிரபு, அசோக், ஆகிய மூன்று காவலர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து காவல் ஆய்வாளர் பத்மா மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காத்திருக்கின்றனர்.
மற்றொருபுறம் ஒரு பார்வை மாற்றுத்திறனாளிக்கு நேர்ந்த கொடுமையை மனித உரிமை ஆணையத்தில் வழக்காக பதிவு செய்ய உள்ளதாக வழக்கறிஞர் பழனியப்பன் நம்மிடம் தொலைபேசியில் கூறியுள்ளார்.