Skip to main content

மலேசியாவில் மகன், மருமகள், பேத்தி உயிரிழப்பு- அரசுக்கு உறவினர்கள் கோரிக்கை!

Published on 25/07/2021 | Edited on 25/07/2021

 

 

CUDDALORE DISTRUCT FAMILY INCIDENT IN MALASIYA GOVERNMENT


கடலூர் மாவட்டம், திட்டக்குடி தெற்கு தெருவைச் சேர்ந்த பிரதாபன் சிங் என்பவரின் மகன் ரவிராஜா (வயது 40). மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூர் நகரில் சாப்ட்வேர் இன்ஜினியராகப் பணிபுரிந்து வந்த இவருக்கும், சத்யா (வயது 39) என்பவருக்கும், கடந்த 2011- ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.  

 

இன்ஜினியர்களான கணவன், மனைவி இருவரும் மலேசியாவில் பணியாற்றி வந்தனர். இவர்களுக்கு குகதாராணி என்ற 5 வயது மகள் உள்ளார். இவர்கள் குடும்பத்துடன் மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூர் பகுதியில் டாமன் தோனகா செலத்தானில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 15 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். 

 

இந்த நிலையில் கடந்த ஜூலை 14- ஆம் தேதி அன்று ரவிராஜாவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மலேசியாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அதனை தொடர்ந்து கடந்த ஜூலை 16- ஆம் தேதி மனைவி சத்யா, மகள் குகதாராணக்கும் கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர்கள் இருவரும் தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டனர்.  

 

இந்நிலையில், ஜூலை 16- ஆம் தேதி சத்யாவின் உடல் நிலை மோசமானது. இதனால் தாய், மகள் இருவரையும் பார்த்துக் கொள்ளவும், உதவி செய்யவும், ஆள் இல்லாததால் சத்தியா மன அழுத்தத்தில் இருந்த நிலையில் குழந்தையுடன் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து தனது கணவருக்கு செல்ஃபோனில் குறுஞ்செய்தி அனுப்பி விட்டு, ஜூலை 16- ஆம் தேதி அன்று மாலை 06.00 மணியளவில் தான் வசித்து வந்த 18 ஆவது மாடியிலிருந்து ஐந்து வயது மகளுடன் குதித்து தற்கொலை செய்துகொண்டார். 

 

இந்த தகவல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரவி ராஜாவுக்கு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரவிராஜாவும் சிகிச்சை பலனின்றி நேற்று (24/07/2021) மாலை மலேசிய மருத்துவமனையில் உயிரிழந்தார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி, குழந்தை உள்ளிட்ட மூன்று பேர் இறந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

பணிக்கு சென்ற மகன், மருமகள், பேரக்குழந்தை வீடு திரும்பாத நிலையில் சடலத்தை கொண்டு வர முடியாத நிலையிலும் அவர்களின் அஸ்தியையாவது கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்களது பெற்றோர், உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


 

சார்ந்த செய்திகள்