Published on 17/06/2021 | Edited on 17/06/2021

ஜூன் 17ஆம் தேதி பிரதமர் மோடியை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு இச்சந்திப்பு உறுதி செய்யப்பட்டது. தமிழ்நாட்டின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக முன்னாள் எம்.பி. விஜயன் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.
இன்று காலை (17.06.2021) சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து காரில் விமான நிலையம் புறப்பட்ட நிலையில், தற்போது மு.க. ஸ்டாலின் டெல்லி சென்றடைந்தார். டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று மாலை 5 மணிக்கு பிரதமரை சந்திக்க உள்ள முதல்வர், நீட் தேர்வு, ஹைட்ரோகார்பன், எழுவர் விடுதலை உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து பேசவுள்ளார். டெல்லியில் கட்டப்படும் திமுக அலுவலகத்தைப் பார்வையிட்ட பின் தமிழ்நாடு இல்லத்திற்கு மு.க. ஸ்டாலின் செல்லவிருக்கிறார். டி.ஆர். பாலுவின் உத்தரவை அடுத்து ஏற்கனவே திமுக எம்.பிக்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.