கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி நேற்று முதல் மாடியில் இருந்து கீழே விழுந்தார்.
கரூர் மாவட்டம், லாலாப்பேட்டையில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. கள்ளப்பள்ளியைச் சேர்ந்த செந்தில்குமாரின் 15 வயது மகள் அப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளியில் நடைபெற்ற கலைநிகழ்ச்சியில் பெற்றோருடன் செந்தில்குமாரின் மகளும் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சி முடிந்ததும் பள்ளியில் சகதோழிகளுடன் பேசிக்கொண்டு இருந்த மாணவி யாரும் எதிர்பாராத நிலையில் பள்ளியின் முதல்மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளார். உடனிருந்த மாணவிகள் ஆசிரியர்களிடம் கூற அவர்கள் மாணவியை மீட்டு திருச்சி மருத்துவமனையில் சேர்த்தனர். முதுகில் பலத்த அடி பட்டுள்ளது மருத்துவர்களின் சோதனையில் தெரியவந்தது. தொடர்ந்து மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மாணவி விழுந்த இடத்தில் சோதனை நடத்தினர். மேலும், இது குறித்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், மாணவி பேசும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. அதில், “கலைநிகழ்ச்சிக்கு எல்லாரும் போன் கொண்டு வந்து வீடியோ எடுத்தாங்க. என்கிட்ட ஒரு அக்கா போன் கொடுத்து வீடியோ எடுக்கச் சொன்னாங்க. நான் எடுக்க மாட்டேன்னு சொன்னேன். திரும்பவும் கொடுத்து அந்த அக்காகிட்ட கொடுனு சொன்னாங்க. நான் வாங்கிக் கொடுத்தேன். இதைப் பார்த்த மிஸ் திட்டிட்டாங்க. எல்லார் முன்னாடியும் திட்டிட்டாங்க. எல்லாரும் பாத்தாங்க. யாரும் என்கிட்ட பேசமாட்டாங்க. டீச்சர்ஸ் எல்லாம் என்ன ஒதுக்கி வைப்பாங்கனு பயந்து தான் மேல இருந்து கீழ குதிச்சிட்டேன்.” என்று கூறினார்.
வீடியோ எடுப்பவர் என்ன சொல்லி திட்டினாங்க என்று கேட்டதற்கு மாணவி, “நீ எதுக்கு இப்படி எல்லாம் பண்ற. ஃப்ராடு பண்றியா. பொய் பேசுறவங்கள எனக்கு சுத்தமா பிடிக்காது. உண்மைய சொல்லு. உன்மேல தான் தப்பு இருக்கு. நீ எதுக்கு போன் வாங்கி கொடுத்த”னு சொன்னாங்க. மிஸ், அந்த அக்கா கொடுக்க சொன்னதால தான் கொடுத்தேன்னு சொன்னேன். அதுக்கு மிஸ் முப்பதாயிரம் போன யாருன்னே தெரியாதவங்க, உன்கிட்ட கொடுப்பாங்களா. பொய் சொல்லாதனு சொன்னாங்க” எனக் கூறினார்.