திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் 135 வது காங்கிரஸ் நிறுவன நாளை முன்னிட்டு காங்கிரஸ் சிறுபான்மை துறை மாநில தலைவர் அஸ்லம் பாஷா காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து கொடி வணக்கம் செய்து இனிப்புகளை வழங்கினார்.
பின்னர் அம்பேத்கார் எழுதிய அரசியல் சாசனத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷா சரியாக படிக்கவில்லை என கூறி அவருக்கு அஞ்சல் அலுவலகத்தில் இருந்து அமித்ஷாவிற்கு அம்பேத்கர் எழுதிய அரசியல் சாசனத்தை அஞ்சல் மூலம் அனுப்பினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக போராடி வருகின்றனர். இந்தியாவிலேயே 15 க்கும் மேற்பட்ட முதலமைச்சர்கள் இந்த குடியுரிமை சட்டத்தை எதிர்த்து வருகின்றனர்.
தமிழகத்தில் இந்த அரசு அதனை எதிர்க்க வேண்டும். இல்லையென்றால், திருடன் கையில் சாவி கொடுப்பதுபோல என்று சொல்லுவார்கள், அதைப்போல திருடன் கையில் சாவி கொடுத்து விட்டு திறக்கின்ற ஆட்சியாக ஒரு முஸ்லிம் பெண்ணை அமைச்சராக்கி விட்டு பாரதிய ஜனதா கட்சி கொண்டுவரும் திட்டங்களுக்கு அதிமுக அரசு செயல்படுகிறது.
எடப்பாடி, ஓபிஎஸ் ஆட்சியை அகற்றக் கூடிய வகையில் வருங்காலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்களை ஒன்று திரட்டி வாணியம்பாடியில் உள்ள தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நீலோபர் கபீல் வீட்டை முற்றுகை போராட்டம் நடத்துவோம்" என்றார்.