Skip to main content

ஆன்மீக பூமி, பலாத்கார பூமியாகி விட்டது - உயர்நீதிமன்றம் வேதனை!

Published on 31/07/2018 | Edited on 31/07/2018
 


ஆன்மீக பூமி, பலாத்கார பூமியாகி விட்டதாக வேதனை தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த காம மிருகங்கள், குழந்தைகளை கூட விட்டு வைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

அறுபது வயது மூதாட்டியை பலாத்காரம் செய்து கொலை செய்தது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை நீதிபதி கிருபாகரன், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்தது தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பி, மத்திய உள்துறை, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைகள் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார்.

 

 

இந்த வழக்கை காணொலி காட்சி மூலம் நீதிபதி கிருபாகரன் விசாரித்தார். அப்போது மத்திய அரசு தரப்பில் பதிலளிக்காததற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதி, அடுத்த விசாரணையின் போது, இந்த கேள்விகளுக்கு பதிலளிக்காவிட்டால், மத்திய உள்துறை மற்றும் மாநில உள்துறை செயலாளர்களும், மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை செயலாளர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டி வரும் எனவும் எச்சரித்து வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 1ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

மேலும், சமீப காலமாக அதிகரித்து வரும் பலாத்கார குற்றச் சம்பவங்களை மேற்கோள்காட்டிய நீதிபதி, ஆன்மீக பூமி என்று அழைக்கப்பட்ட இந்தியா, தற்போது பலாத்கார பூமி என்ற அளவுக்கு தரம் தாழ்ந்து விட்டது என வேதனை தெரிவித்த நீதிபதி, இந்த காம மிருகங்கள், குழந்தைகளையும் கூட விட்டு வைக்கவில்லை என்றும், இதற்கு சமூகம் மற்றும் சம்பந்தப்பட்ட மனிதனின் உளவியல் ரீதியான பிரச்னையுமே காரணம் எனவும் குறிப்பிட்டார்.

சார்ந்த செய்திகள்