2023 - 2024 ஆம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் பொது பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்த இந்த பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியானது. இந்நிலையில் இன்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற 2021 ஆம் ஆண்டு முதல் வேளாண்துறைக்கு தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில் மூன்றாவது முறையாக அடுத்த நிதியாண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்து வருகிறார்.
பச்சைநிறத்துண்டு அணிந்து பட்ஜெட்டை தாக்கல் செய்த அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தொடர்ந்து வாசித்து கொண்டு இருக்கும் போது, “தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் ரகங்களான சீரகசம்பா, மாப்பிள்ளை சம்பா, கருப்புக் கவுனி, பித்தளை சம்பா, தங்க சம்பா ஆகியவற்றை பாதுகாத்து பரவலாக்கிட நெல் ஜெயராமன் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கத்தில் 2021- 2022 ஆம் ஆண்டு 196 மெட்ரிக் டன் விதைகள் விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்பட்டுள்ளது.
அதேபோன்றே இவ்வாண்டும் அரசு விதைப்பண்ணைகளில் 200 ஏக்கர் பரப்பளவில் விதை உற்பத்தி செய்யப்பட்டு மானிய விலையில் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும். இதற்கென ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றார். மேலும் பேசிய அமைச்சர், “மாப்பிள்ளை சம்பா சாப்பிட்டால் மாப்பிள்ளையாக இருக்கலாம். தங்க சம்பா சாப்பிட்டால் தங்கமாக இருக்கலாம். இதெல்லாம் சாப்பிடனும் என்றார். இதற்கு உடனடியாக சபாநாயகர் அப்பாவு, “எல்லோருக்கும் கொடுங்க, சாப்பிடத் தயாராக உள்ளார்கள்” என்றார். சபாநாயகருக்கு பதில் அளித்த அமைச்சர், “அனைவருக்கும் கொடுக்கலாம்” எனக் கூற அவையே கலகலப்பானது.