மக்கள் திட்டங்களை மத்திய அரசு செய்ய வைத்து காட்டியது அதிமுக அரசு. காவிரி நதிநீர் மீட்பு பொதுக்கூட்டத்தில் அமைச்சர்கள் பேச்சு.
கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் சிதம்பரத்தில் காவேரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. சிதம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன் தலைமை வகித்தார். தமிழக சட்டதுறை அமைச்சர் சண்முகம், உள்ளாட்சி துறைஅமைச்சர் வேலுமணி, தமிழக தொழில் அமைச்சர் சம்பத் ஆகிய மூன்று அமைச்சர்கள் பங்கேற்றார்கள்.

அமைச்சர் சி.வி சண்முகம் பேசுகையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பிரச்னையில் நாடாளூமன்றத்தை முடக்கி வைத்தவர். நாங்கள் யாருக்கும் அடிபணிய வேண்டிய அவசியம் இல்லை மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்த நாங்கள் யாருக்கும் பயப்படமாட்டோம் என்றார். அ.தி.மு.க.வில் இனி எந்த குடும்பமும் ஆதிக்கம் செலுத்தமுடியாது. வரும் நாடாளுமன்ற தேர்தல் உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற தேர்தல்களில் அதிமுகதான் வெற்றி பெறும். திமுக செயல்தலைவர் ஸ்டாலினின் கொள்கை எப்படியாவது முதல்வராக வேண்டும் என்பது தான்.

திமுக ஆர்.கே.நகரில் நடைபெற்ற இடைத் தேர்தலில் டெபாசிட் இழக்கவைத்ததுதான் ஸ்டாலின் சாதனை. சிதம்பரத்தில் குடிநீர் வழங்கும் வகையில் வீராணம் ஏரியிலிருந்து சிதம்பரத்திற்கு புதிய குடி தண்ணீர் திட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க்ப்படும் என தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி பேசினார். அமைச்சர் சம்பத், இனி நடிகர்கள் நாட்டை ஆள முடியாது. அவர்கள் நடிக்க கூட முடியாத நிலை ஏற்படும். காவிரி பற்றி பேச திமுகவிற்கு எந்த அருகதையும் இல்லை என பேசினார்.

கூட்டம் நடைபெற்ற இடம் போல்நாரயண குறுகலான தெருவில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. தெருவின் அகலத்தில் 11 சேர்களும் நீளத்தில் 130 வரிசைகளும் தான் போட முடிந்தது. மொத்ததில் 1500 பேர் தான் உட்கார முடியும் அந்த தெருவில் 100 பேர் நின்று கொண்டு இருந்தனர். இதில் அமைச்சர் வேலுமணி இரவு 8.50 மணிக்கு பேசும் போது பாதிக்கும் மேற்பட்ட சேர்கள் காலியாக இருந்தது. அவரோ தமிழகத்தில் எங்கும் இல்லாத அளவுக்கு இங்கு தான் இந்த வெற்றி கூட்டத்திற்கு லட்சம் லட்சமாக மக்கள் வந்துள்ளதாக பேசினார். இதனை கூட்டத்தில் கேட்டுகொண்டு இருந்த சில காவல்துறை நண்பர்கள் மற்றும் அதிமுகவினரே அவர் பேசும் போது எவ்வளவு சேர் காலியாக இருக்கிறது நீங்களே பாருங்கள் என்று படம் எடுத்து அனுப்பி லட்சம் பேர் என்று சொல்வதற்கு ஒரு அளவு வேண்டாமா, நியாம் வேண்டாமா என்றார்கள்.