




மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாம் இன்று முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. மின்வாரிய அலுவலகங்களில் இன்று முதல் டிசம்பர் 31 ஆம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து நாட்களிலும் காலை 10:30 மணி முதல் மாலை 5.15 மணி வரை ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைப்பதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சிறப்பு முகாம்கள் இன்று துவங்கியது.
இதன் காரணமாகப் பொதுமக்கள் ஆதார் எண் இணைக்க மின் அலுவலகங்களில் குவிந்து வருகின்றனர். இதனையொட்டி இன்று மயிலாப்பூர் மின் பகிர்மான அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமை மின்வாரிய அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் வரிசையில் காத்திருந்து ஆதார் எண்ணை மின் கணக்குடன் இணைத்துச் சென்றனர்.