கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பெரியார் நகர், ரோஜாப்பூ தெருவில் வசித்து வருபவர் ஜெயச்சந்திரன். இவர், தனியார் பேருந்து உரிமையாளர். இவர் கடந்த சனிக்கிழமை அன்று, குடும்பத்துடன் கேரளாவில் உள்ள குருவாயூர் கோயிலுக்கு சென்றுள்ளார். கோவிலுக்கு சென்று விட்டு இன்று அதிகாலை 4 மணி அளிவில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது, வீட்டின் முன்பக்க கதவுகள் அனைத்தும் உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது, வீட்டினுள் இருந்த பூஜை அறை மற்றும் படுக்கை அறைகளில் வைக்கப்பட்டிருந்த அனைத்து பீரோக்களும் உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு விருத்தாசலம் காவல் துறையினருக்குத் தகவல் அளித்தார்.
தகவலின் அடிப்படையில் விருத்தாச்சலம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் 62 பவுன் நகை, 15 கிலோ வெள்ளி பொருட்கள், 5 லட்சம் மதிப்பிலான வைரம் மற்றும் 2 லட்சம் ரூபாய் ரொக்க பணத்தினையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளது தெரிய வந்தது.
திருட்டு சம்பவத்தில் குற்றவாளிகளைத் தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் ஆதாரங்களைச் சேகரிக்க வர வைக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ச்சியாக விருத்தாச்சலத்தில் பல்வேறு பகுதிகளில் திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வருவதால், பொதுமக்கள் கடும் அச்சத்திற்கும் உள்ளாகியுள்ளனர்.