தமிழ்நாட்டில் கொலைகள் நடப்பது அன்றாட நிகழ்வாகி விட்டது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.
சேலம் மாவட்டம் நங்கவள்ளியில் ஜவுளிக்கடைக்குள் புகுந்த இரண்டு பேர், இந்திய கம்யூனிஸ்ட் பிரமுகரான வேலு தங்கமணி என்பவரை கடந்த ஒரு வாரத்திற்கு முன் சரமாரியாக வெட்டினர். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் ஜூலை 29ம் தேதி உயிரிழந்தார்.
அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இந்திய கம்யூ., கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செவ்வாய்க்கிழமை சேலம் வந்தார். வேலு தங்கமணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் கொலை, கொள்ளை நடப்பது அன்றாட வாடிக்கையாகி விட்டது. தற்போது முதல்வரின் சொந்த தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் கொலை செய்யப்பட்டு உள்ளார். இந்த கொலையை செய்த இரண்டு பேர் தாமாக முன்வந்து சரணடைந்துள்ளனர். இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? எதற்காக இந்த கொலை நடந்தது? எத்தனை பேருக்கு தொடர்பு இருக்கிறது என்ற விவரங்களை இன்னும் காவல்துறையினர் கண்டுபிடிக்கவில்லை.
முதல்வர் தொகுதியில் நடந்த இந்த படுகொலையை வன்மையாக கண்டிக்கிறோம். நேற்று குளித்தலையில் தந்தை, மகன் படுகொலை, நெல்லை, தூத்துக்குடியில் படுகொலை என கொலைகள் நடப்பது அன்றாட நிகழ்வாகி வருகிறது.
யாருக்கும் இங்கே பாதுகாப்பு இல்லை. ஆனால் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அரசு என்ன செய்வது என கேள்வி எழுப்புகிறார். மேலும் ஆணவப்படுகொலை குறித்து கேள்வி எழுப்பினால், முந்தைய ஆட்சியில் நடந்தது. இந்த ஆட்சியிலும் நடக்கிறது. நாங்கள் என்ன செய்ய முடியும்? என முதல்வர் பதிலளிக்கிறார். இப்படி ஒரு பதிலைச் சொல்ல ஏன் ஆட்சியில் இருக்க வேண்டும்?
ஆணவப்படுகொலையை ஒடுக்குவதை விட்டுவிட்டு அதற்கு ஆதரவாக பேசி வரும் முதல்வரின் பேச்சைக் கண்டிக்கிறோம். காவல்துறை நினைத்தால் நொடிப்பொழுதில் அனைத்து விவரத்தையும் கண்டுபிடிக்க முடியும். நங்கவள்ளி சம்பவத்தில் சிசிடிவி கேமராவில் அடையாளம் தெரிந்தும் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது, இதன் பின்னணியில் இருந்து ஏதோ ஒன்று இயக்குவதுபோல தெரிகிறது. அவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு முத்தரசன் கூறினார்.