தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் உங்களது பணி எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு பதிலளிக்கும்போது, "விளையாட்டு துறைக்கு பல கோரிக்கைகளை முதல்வரிடம் வைக்க உள்ளோம். 25 கோடி செலவில் தமிழகத்தில் முதல் முறையாக முதலமைச்சர் கோப்பை போட்டி பல்வேறு மாவட்டத்தில் நடத்தி உள்ளோம். விரைவில் இறுதி போட்டி நடத்தி சென்னையில் முதலமைச்சர் கையால் விளையாட்டு வீரர்களுக்கு பரிசுகள் வழங்க உள்ளோம்" என்றார். தஞ்சை செங்கிப்பட்டி அருகே ஸ்போர்ட்ஸ் சிட்டி எப்போது கொண்டு வருவீர்கள் என்ற கேள்விக்குப் பதிலளிக்கையில், "அந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்யத்தான் வந்திருக்கிறேன். விரைவில் அது பற்றிய விவரங்களை கூறுகிறேன்" என்றார். பின்னர் அவர் செங்கிப்பட்டி புறப்பட்டுச் சென்றார்.
அப்போது அமைச்சர்கள் கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மேயர்கள் அன்பழகன் (திருச்சி), சண். ராமநாதன்(தஞ்சை), எம்.எல்.ஏக்கள் காடுவெட்டி தியாகராஜன், திருவையாறு துரை.சந்திரசேகரன் மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.