“நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 40ம் வெற்றி பெற வேண்டும். அதற்காக ஒவ்வொருவரும் உழைத்திட வேண்டும்” என அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
திருச்சியில் கலைஞர் சிலையை காணொளி காட்சி மூலம் அமைச்சர் உதயநிதி திறந்து வைத்தார். அதன்பின் பேசிய அவர், “சேலம் மாநாட்டை வெற்றிகரமாக நடத்த உதவிய அனைவருக்கும் எனது நன்றி. மாநாட்டை வெற்றி மாநாடாக செய்து காட்டிய கே.என். நேருவிற்கு நன்றி. கே.என். நேருவின் உழைப்பை பார்த்து நான் வியந்து போகிறேன். திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் இதுவரை 76 நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது. திருச்சி தெற்கு மாவட்டம் முதன்மையாக உள்ளது.
திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் விளையாட்டு போட்டிகள், கலைஞர் சிலை திறப்பு விழா, அணிகளுக்கான ஆலோசனைக் கூட்டங்கள், மருத்துவ முகாம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. மற்ற மாவட்டங்களுக்கு முன்னுதாரணமாக திருச்சி தெற்கு மாவட்டம் விளங்குகிறது. எனவே தெற்கு மாவட்டச் செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். திருச்சியில் கலைஞர் சிலையை திறந்தது எனக்கு பெருமையாக உள்ளது.
கலைஞரை முதன் முதலில் எம்எல்ஏ ஆக்கியது திருச்சி மாவட்டம் குளித்தலை தொகுதிதான். அதனைத் தொடர்ந்து அவர் போட்டியிட்ட அனைத்து தேர்தலிலும் கலைஞர் வெற்றி பெற்றார். கலைஞருக்கு பிடித்த ஊராக திருச்சி விளங்கியது. திருச்சி கல்லக்குடி போராட்டம் தமிழக வரலாற்றில் முக்கியமான போராட்டமாக உள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த திருச்சி மாவட்டத்தில் கலைஞர் சிலை திறப்பது பெருமைக்குரிய விஷயம். மொழிப்போர் தியாகி சின்னச்சாமி ரயில் நிலையத்தில் தீக்குளித்து தமிழுக்காக தனது உயிரை அர்ப்பணித்தவர். தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுக் கொடுத்தவர் கலைஞர். இந்த வீரவணக்க நாளில் சிலை திறப்பு நம் அனைவருக்கும் பெருமை தரக்கூடிய விஷயம்.
பெரியார், அண்ணா, கலைஞர் சிலைகள் சிலருக்கு வயிற்றெரிச்சலை ஏற்படுத்துகிறது. தலைவர்களின் சாதனைகளை விளக்கும் வகையில் தான் சிலைகள் திறக்கப்படுகிறது. திமுக தேர்தலில் போட்டியிடலாமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்த இடம் திருச்சி. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 40ம் வெற்றி பெற வேண்டும். அதற்காக ஒவ்வொருவரும் உழைத்திட வேண்டும்” என்றார்.