முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 4 ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள கட்சி பொறுப்பாளர்களும் தொண்டர்களும் அங்காங்கே ஜெ.படத்தை வைத்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
அதுபோல் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மேற்கு மாவட்டசெயலாளரும், வனத்துறை அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் முன்னாள் அமைச்சரும், கிழக்கு மாவட்ட செயலாளருமான நத்தம் விஸ்வநாதனும் திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்துக்கு காலையில் மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினார்கள். அதன்பின் மாலையில் திண்டுக்கல் மணி கூண்டில் வைக்கப்பட்டிருந்த ஜெ.படத்திற்கு வனத்துறை அமைச்சர் சீனிவாசன் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினார்.
அதன்பின் வனத்துறை அமைச்சர் சீனிவாசன் பேசும்போது, ஜெயலலிதாவின் ஆட்சியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் சிறப்பாக செய்து வருகிறார்கள். அதுபோல் நல்லவர்கள் ஆட்சி செய்தால் நாடு செழிக்கும் என்பார்கள். அதுபோல்தான் தற்பொழுது பெய்து வரும் மழையால் ஏரி, குளங்கள், அணைகள் எல்லாம் நிறைந்து ஓடுவதை பார்த்து மக்கள் மழை நின்றால் போதும் என்ற நிலைக்கு வந்திருக்கிறார்கள். இந்த மழை மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் நேரடியாகச் சென்று மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கியும் வருகிறார்கள். அந்த அளவுக்கு ஜெ.ஆட்சியை இருவரும் சிறப்பாக செய்து வருகிறார்கள். ஜெயலலிதாவின் நினைவு நாளை முன்னிட்டு நாம் அனைவரும் ஒரு சபதம் எடுக்க வேண்டும். தீயசக்திகளான ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி இந்த வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். எனவே வரக்கூடிய தேர்தலில் நாம் அனைவரும் சிறப்பாக செயல்பட்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை மீண்டும் முதலமைச்சராக கொண்டுவர வேண்டுமென்று உறுதி மொழி எடுப்போம் என்று கூறினார். இதில் முன்னாள் மாவட்ட செயலாளர் மருதராஜ், மாவட்ட கூட்டுறவு சங்கத் தலைவர் ராஜ்மோகன், திண்டுக்கல் மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜசேகர், மாவட்ட ஜெ.பேரவை செயலாளர் பாரதி முருகன் உள்பட கட்சி பொறுப்பாளர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.