நெல்லையை இரண்டாகப் பிரித்து தென்காசி புதிய மாவட்டம் உதயமானது. மாவட்டத்தின் கலெக்டராக அருண் சுந்தர் தயாளன் நியமிக்கப்பட்டார். பின்னர் அவர் அளித்த அறிக்கையில், தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆயிரப்பேரியில் அமைக்கப்படும். அதற்காக பைபாஸ் சாலை அமைக்கப்படும் என்றார்.
இதனை தி.மு.க. உள்ளிட்ட பிரதான கட்சிகள் எதிர்த்தன. மாவட்டத்தில் இருந்து ஆயிரப்பேரி தொலை தூரம் இருப்பதால், மக்களின் வசதிக்காக ஆட்சியர் அலுவலகம் தென்காசி நகருக்குள் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று (19.12.2019) காலை தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு சர்வ கட்சிகளும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது ஆட்சியர் அலுவலகத்தை ஆயிரப்பேரியில் அமைக்கக் கூடாது என கோஷமிட்டனர். தி.மு.க.வின் மாவட்ட செயலாளர் சிவபத்மநாபன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், நகர செயலாளர் வெங்கடேசன், முன்னாள் எம்.எல்.ஏ. சதன் திருமலைக்குமார் கடையநல்லூர் எம்.எல்.ஏ. அபுபக்கர், சி.பி.ஐ.யின் மாவட்டத் தலைவர் காசி விஸ்வநாதன் வி.சி.க.வின் டேனியில் உள்ளிட்டோரும் 300- க்கும் மேற்பட்ட தொண்டர்கள், மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.