சென்னை ஆழ்வார் திருநகரில் வெங்கடேஷ்வரா மெட்ரிக் பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயின்று வந்த தீட்சித் என்ற 8 வயது மாணவர் இன்று காலை பள்ளி பேருந்து மோதி பள்ளி வளாகத்திலேயே பலியானார். பள்ளியின் பேருந்து ஓட்டுநர் பேருந்தை பின்னோக்கி நகர்த்த முயன்ற போது பின்னால் நின்றுகொண்டிருந்த மாணவன் தீட்சித் மீது பேருந்தின் சக்கரம் ஏறி சம்பவ இடத்திலேயே அந்த மாணவன் உயிரிழந்தான். இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக பேருந்தை இயக்கிய ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
மேலும் பள்ளியின் தாளாளர், தலைமையாசிரியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட அனைவரும் கைது செய்யப்படும் வரையில் தங்கள் மகனின் உடலை வாங்கப்போவதில்லை என்று பலியான சிறுவனின் பெற்றோர் கூறியிருந்த நிலையில், அதிகாரிகளின் சமரசத்துக்கு பிறகு அவர்கள் உடலை பெற்றுக்கொண்டனர்.
இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக பள்ளிக்கல்விதுறை அலுவலகத்தில் அதன் செயலாளர் தலைமையில் அவசரக்கூட்டம் நடைபெற்றது. அதன்படி, இந்த சம்பவம் நடைபெற்ற பள்ளிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், உயிரிழந்த மாணவனின் பெற்றோருக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆறுதல் தெரிவித்தார். மேலும், இந்த விவகாரத்தில் சட்ட நடவடிக்கைகள் உறுதியாக இருக்கும் என்று அவர்களிடம் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.