கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே பட்டாக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த வேலு என்கிற வேல்முருகன் என்பவர் தொடர்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்டுவந்தார். நேற்றிரவு (13.06.2021) வேலு சாராயம் ஊறல் போட்டு விற்றுவருவதாக சிறுப்பாக்கம் காவல் நிலைய தனிப்பிரிவு ஏட்டு ரமேஷ்பாபு, விருத்தாசலம் கலால் இன்ஸ்பெக்டர் பிருந்தா இருவருக்கும் ரகசிய தகவல் கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து நேற்றிரவு 11 மணியளவில் சிறுபாக்கம் போலீசார், விருத்தாச்சலம் கலால் இன்ஸ்பெக்டர் பிருந்தா, எஸ்.ஐ. பாக்யராஜ் உள்ளிட்ட போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் எல்லைப்பகுதியான ஈரியூர் கிராமத்தில் விவசாயம் செய்வதாக கூறி நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து, அங்கு வேலு தனது மனைவி, மகன் உள்ளிட்ட குடும்பத்தினருடன் தங்கி சாராயம் ஊறல் போட்டு பெரிய அளவில் விற்பனை செய்வது தெரியவந்தது.
இதையடுத்து, அந்த இடத்தைப் போலீசார் சுற்றி வளைத்துபோது சாராய ஊறல் போட்டு எரியும் அடுப்புடன் கையும் களவுமாக சிக்கினார்கள். அப்போது வேலு தப்பியோடி தலைமறைவானார். இதையடுத்து அங்கிருந்த 6 பேரலில் இருந்த 1,200 லிட்டர் சாராய ஊறலைப் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், சாராயம் ஊரல் போட்டு குடும்பத்துடன் விற்பனை செய்துகொண்டிருந்த வேலு மனைவி மீனா (வயது 33), மகன் அபிஷேக் (வயது 15 ) ஆகிய இருவர் மீதும் விருத்தாசலம் மதுவிலக்கு போலீசார் வழக்குப் பதிவுசெய்து கைது செய்தனர். தப்பியோடிய வேலுவை போலீசார் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.