மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் விரைந்து நிவாரணம் வழங்கக்கோரி அதிமுக சார்பில் இன்று டெல்டா மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
டெல்டா மாவட்டங்கள் உட்பட தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் வடகிழக்கு பருவமழையின் காரணமாக கடந்த நவம்பர் மாதம் முதல் இந்த ஆண்டு ஜனவரி மாத துவக்கம் வரையில் விட்டுவிட்டு மழை பெய்தது. குறிப்பாக, கடந்த நவம்பர் முதல் டிசம்பர் மாதம் வரையில் மழைப் பொழிவு அதிகப்படியாக இருந்தது. இதன் காரணமாக, விவசாயிகள் விளைவித்திருந்த நெற்பயிற்கள் எல்லாம் அழுகி, அறுவடை செய்ய முடியாத நிலைக்குப் போனது. அதேபோல், அறுவடை செய்த நெல் மூட்டைகளும் மழையில் நனைந்து நாசமானது.
அதனைத் தொடர்ந்து, மத்திய மற்றும் மாநில குழுக்கள் பாதிக்கப்பட்ட நிலங்களைப் பார்வையிட்டு பயிர் சேதங்கள் குறித்து கணக்கெடுத்தன. ஆனால், பயிர் சேதத்திற்கான நிவாரணம் இதுவரை வழங்கவில்லை என்றும், அதனை விரைந்து வழங்க வேண்டும் என்றும் தஞ்சை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அனைத்து டெல்டா மாவட்டங்களின் தாலுகா அலுவலகம் முன்பும், அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில், கடந்த அதிமுக ஆட்சியின்போது ஏக்கருக்கு ரூ. 20 ஆயிரம் நிவாரணம் வழங்க அறிவித்துள்ள நிலையில், தற்போது ஹெக்டருக்கு 20 ஆயிரம் ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அதனை உயர்த்தியும் விரைந்தும் நிவாரணம் வழங்க வேண்டும் என அதிமுகவினர் வலியுறுத்தினர்.