தமிழகத்தில் புதிய கல்விக்கொள்கையை உருவாக்குவது தொடர்பான விதிகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழகத்திற்கென்று பிரத்யேக கல்விக்கொள்கையை உருவாக்குவதற்காக 13 பேர் கொண்ட குழு கடந்த ஏப்ரல் மாதம் உருவாக்கப்பட்டது. ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழுவில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆளுமைகள் இடம்பெற்றுள்ளனர். இந்த நிலையில், இந்தக் குழு அமைக்கப்பட்டதற்கான அரசாணையை இன்று வெளியிட்டுள்ள தமிழக அரசு, இது தொடர்பான விதிகளையும் வெளியிட்டுள்ளது. ஒரு வருட காலத்திற்குள் கல்விக்கொள்கையை வடிவமைக்க வேண்டும், தமிழ்நாட்டு மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்தக் கல்வி கொள்கை வடிவமைக்கப்பட வேண்டும், வேலை வாய்ப்புகளுக்கு ஏற்ற கல்விக்கொள்கை வடிவமைக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விதிகள் அதில் இடம்பெற்றுள்ளன.
புதிய கல்விக் கொள்கையை நாடு முழுக்க அமல்படுத்துவது குறித்து ஆலோசிப்பதற்காக குஜராத் மாநிலத்தில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் நேற்று நடைபெற்ற கல்வி அமைச்சர்கள் மாநாட்டை தமிழக அரசு புறக்கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.