திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் அண்ணாதுரை தலைமையில் தி.மு.க.வைச் சேர்ந்த கீழ்பென்னாத்தூர் எம்.எல்.ஏ பிச்சாண்டி, செங்கம் எம்.எல்.ஏ மு.பெ.கிரி, வந்தவாசி எம்.எல்.ஏ அம்பேத்குமார், போளுர் எம்.எல்.ஏ சேகரன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஆகியோர் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திப் நந்தூரியை அவரது அலுவலகத்தில் டிசம்பர் 5ஆம் தேதி சந்தித்தனர்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி அண்ணாதுரை, “திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளனர். மக்களால் தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இருக்கும் நிலையில், அதிகாரிகளே நிர்வாகத்தை நடத்திக்கொண்டிருக்கின்றனர். மக்கள் பிரதிநிதிகளிடம் அதிகாரிகள் எதுவும் சொல்வதில்லை. ஆளுங்கட்சி பிரமுகர்கள், சிலருக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள். இதனால் உள்ளாட்சி பிரதிநிதிகள் விரக்தியில் உள்ளனர்.
உள்ளாட்சித் துறையில் உள்ள சில உயர் அதிகாரிகள் மக்கள் பிரதிநிதிகளைச் செயல்படவிட வேண்டும். இல்லையேல், ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளைக் கண்டித்து மாவட்ட தி.மு.க. சார்பில், 10 ஆயிரம் பொதுமக்களுடன் பெரும் போராட்டம் நடத்துவோம்” என்றார்.
தி.மு.க. எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் திடீரென மாவட்ட ஆட்சித்தலைவரைச் சந்தித்து, சில அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுக்களைக் கூறி நடவடிக்கை எடுக்கச் சொன்னதோடு, நடவடிக்கை எடுக்கவில்லையெனில் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளது, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.