கடலூர் மாவட்டம், மங்களூர் ஊராட்சி ஒன்றியத்தில் 66 கிராம ஊராட்சிகள் உள்ளன. அதனைச் சார்ந்து சுமார் 150க்கும் மேற்பட்ட ஒன்றியங்கள் உள்ளன. அனைத்து கிராம ஊராட்சித் தலைவர்களும் பொதுமக்களும் தங்களின் அத்தியாவசிய பணிகளுக்கு, தேவைகளுக்கு ஒன்றிய அலுவலகம் அமைந்துள்ள மங்களூர் கிராமத்திற்கு வந்து செல்ல வேண்டும். அப்படி தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் பல்வேறு பணிகளுக்காக மங்களூர் வந்து செல்கிறார்கள்.
இந்த ஒன்றிய அலுவலகம் அமைந்துள்ள மங்களூரில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மாங்குளம் என்ற கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்தில், ‘பிரதமர் கிராம அபிவிருத்தி’ திட்டத்தின் கீழ் தார் சாலை அமைக்கவும், அந்த சாலையில் ஏற்கனவே உள்ள சிறு பாலங்களை அகலப்படுத்துவதற்கு ஒரு கோடியே 75லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துவங்கப்பட்டன.
முதலில் சாலையில் உள்ள சிறு பாலங்கள் அகலப்படுத்தும் பணிகளுக்காக பள்ளங்கள் தோண்டப்பட்டன. அதன்பிறகு கடந்த சில மாதங்களாக எந்தப் பணியும் நடக்கவில்லை. இதனால் அந்த வழியே மங்களூர், வேப்பூர், சிறுபாக்கம் போன்ற ஊர்களுக்கும் சேலம் கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு வாகனங்களில் செல்வோர் பாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து அடிக்கடி விபத்துக்களில் சிக்கி வருகின்றனர். மங்களூரில் இருந்து அடரி, கள்ளக்குறிச்சி, சிறுபாக்கம், சேலம், வேப்பூர் போன்ற ஊர்களுக்கு செல்ல ஐந்து கிலோ மீட்டர் தூரம் கடந்து செல்வதற்கு பதில் 15 கிலோமீட்டர் சுற்றிக்கொண்டு செல்லும் நிலை உள்ளது.
சாலை பணி, பாலம் கட்டுமானப் பணிகள் முடங்கிக்கிடப்பது சம்பந்தமாக ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் பலமுறை புகார் அளித்தும் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மங்களூர் பகுதி கிராம மக்கள் சிபிஎம் கட்சி பிரமுகர் பெரியசாமி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் 4ஆம் தேதி காலை 8 மணியளவில் மங்களூர் - மாங்குளம் சாலையில் பாலம் அகலப்படுத்தும் பணிக்காக தோண்டப்பட்ட இடத்தின் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது கூட ஒன்றிய அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வராததால் ஆர்ப்பாட்டம் நடத்திய பொதுமக்கள் கோபத்துடன் தாங்களாகவே கலைந்து சென்றனர்.