போக்குவரத்துத் துறையில், சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார்.
அதே சமயம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட்12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர். இதற்கிடையே இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். மேலும் செந்தில்பாலாஜி வகித்து வந்த இலாகாக்களான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு. முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில் செந்தில்பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் அலுவலகத்திற்கு அனுப்பி உள்ளதாகவும், இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. செந்தில் ராஜினாமா செய்வது குறித்து முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில், “தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக சுமார் ஏழு மாதங்களுக்கு மேலாக செந்தில்பாலாஜி, ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்களை அமர்வு நீதிமன்றம், உயர்நீதி மன்றம், உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.