கரோனா தடுப்பு நடவடிக்கையாக, தமிழகத்தில் மே 10 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதனால் இன்றும், நாளையும் அனைத்துக் கடைகள், நிறுவனங்கள் இரவு 09.00 மணிவரை இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது. மே 10ஆம் தேதி முதல் மே 24ஆம் தேதி வரை மாவட்டங்களுக்குள்ளும் மாவட்டங்களுக்கு இடையேயுமான அரசு மற்றும் தனியார் பேருந்துகள், ஆட்டோ உள்ளிட்ட போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றும், நாளையும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. பயணிகள் வசதிக்காக இன்றும் நாளையும் சென்னை உள்ளிட்ட நகரங்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது. குறிப்பாக சென்னையில் இருந்து மற்ற ஊர்களுக்கும், முக்கிய நகரங்களுக்குமிடையே பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சிறப்புப் பேருந்துகளில் பயணிக்கும் மக்கள் அரசின் கரோனா தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றி பயணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று மாலை சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் ஆய்வு மேற்கொண்டார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''தமிழகம் முழுவதும் எந்தப் பிரச்னையும் இல்லாமல் மக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரண்டாவது அலை மிகக்கடுமையாக இருக்கிறது. நாம் எல்லோரும் சேர்ந்துதான் இதனை எதிர்கொள்ள வேண்டும். 'பாய்ண்ட் டூ பாய்ண்ட்' பேருந்துகளை ரெடி பண்ணிருக்கோம். மக்கள் அதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். பேருந்துகள் எல்லாம் தயராக இருக்கிறது. மக்கள் எல்லாம் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களுக்கு எந்த இடைஞ்சலும் கிடையாது. தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் பேருந்துகளில் மக்கள் பயணிப்பதற்கான அவசியமே இருக்காது. நாமே அதிக பேருந்துகள் விட்டிருக்கோம்'' என்றார்.