சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி (14.06.2023) அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். அதனைத் தொடர்ந்து கடந்த ஓராண்டுக்கு மேலாகச் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதனையடுத்து இந்த வழக்கில் இன்று (26.09.2024) காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது.
அதில், “சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்படுகிறது. எனவே செந்தில் பாலாஜி ஒவ்வொரு திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகிக் கையெழுத்திட வேண்டும். ரூ.25 லட்சத்திற்கு 2 நபர்கள் ஜாமீன் கொடுக்க வேண்டும். இவ்வழக்கு தொடர்பான அனைத்து விசாரணைகளுக்கும், குற்றவியல் நடைமுறைகளுக்கு அவர் ஒத்துழைப்பு தரவேண்டும்” எனத் தெரிவித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.இதன் மூலம் சுமார் 15 மாதங்களுக்குப் பிறகு (471 நாட்கள்) சிறையில் இருந்து செந்தில் பாலாஜி வெளியில் வர உள்ளது குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்ற நீதிமன்ற தீர்ப்பு நகல் புழல் சிறை அதிகாரிகளுக்குக் கிடைத்தவுடன் இன்று மாலை அல்லது நாளை காலை செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வெளியே வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகப் புழல் சிறையிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதையடுத்து அவரின் சொந்த தொகுதியான கரூரில் திமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் செந்தில் பாலாஜி ஜாமீன் வழங்கப்பட்டது குறித்து தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர், “செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியது மகிழ்ச்சியான செய்தி ஆகும். ஏனென்றால் செந்தில் பாலாஜியின் கடந்த 15 மாத சட்டப் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றிதான் இந்த நிபந்தனை ஜாமீன். செந்தில் பாலாஜி போல் பொறுமையோடு சட்ட போராட்டம் நடத்திய ஒருவரைப் பார்க்க முடியாது. அந்த அளவிற்குச் சிறையிலிருந்து கொண்டே அமைச்சர் பதவி கூட வேண்டாம் என்று சொல்லி, மிகப் பெரிய போராட்டத்திற்குப் பிறகு நிபந்தனை ஜாமீன் பெற்றிருப்பது வரவேற்கத்தக்க ஒன்று. செந்தில் பாலாஜி அவருடைய வழக்கில் இருந்து வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
அமலாக்கத்துறை வழக்குகள் எக்கச்சக்கமாக வழக்குகளைத் தொடர்ந்துள்ளது. எத்தனை வழக்குகளில் அமலாக்கத்துறை வெற்றி பெற்றுள்ளது. அவ்வாறு தொடர்ந்த வழக்கில் அமலாக்கத்துறை வெற்றி பெற்றது கிடையாது. எத்தனை வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து உள்ளார்கள்?. மிகக் குறைவான அளவில் தான் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து உள்ளனர். எனவே வழக்குகளை மட்டும் போடுவதைத்தான் அமலாக்கத்துறையினர் கொள்கையாக வைத்துள்ளனர். இறுதித் தீர்ப்புக்கு அமலாக்கத்துறை செல்வதில்லை. செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பொறுப்பு வழங்குவது குறித்து முதல்வர் அறிவிப்பார். இதுபற்றி கருத்து கூற எங்களுக்கு உரிமை இல்லை” எனத் தெரிவித்தார்.