தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 15ஆம் தேதி (15.10.2024) தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இத்தகைய சூழலில் தான் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தின் நாகப்பட்டினம், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. எனவே ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்படுகிறது.
அதேபோன்று திருவாரூர், தஞ்சாவூர்,மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் மற்றும் தென்காசி ஆகிய 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளத எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இரவு 7 மணி வரை 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் வரை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், அதேபோல சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, திருவாரூர், தூத்துக்குடி மற்றும் காரைக்காலில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது ராமநாதபுரம் மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழையால் பாம்பன் பகுதிகளில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். நேற்று பாம்பனில் மேக வெடிப்பு ஏற்பட்டு மூன்று மணி நேர இடைவெளியில் 19 சென்டிமீட்டர் மழை பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.