காலை உணவுத் திட்டத்தை அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தும் நோக்கில், நாகை மாவட்டம் திருக்குவளையில் கலைஞர் படித்த அரசு நடுநிலைப் பள்ளியில் நேற்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் 31 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் 17 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை தொடங்கி வைத்து மாணவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் அமர்ந்து உணவு அருந்தினார். இதேபோன்று தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள எம்.எல்.ஏக்கள். எம்.பிக்கள். அமைச்சர்கள் என அனைவரும் தங்கள் தொகுதிகளுக்கு உட்பட்ட பள்ளியில் இத்திட்டத்தை தொடங்கி வைத்து மாணவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டனர்.
அந்த வகையில் மதுரையில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காலை உணவுத் திட்டத்தைத் தொடங்கி வைத்து மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். அப்போது அவர் மாணவர்களிடம் நடந்துகொண்ட விதம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மாணவர்களிடம் அமைச்சர் பிடிஆர், அனைவரும் நன்றாக சாப்பிடுங்கள் என்றார். மேலும் பக்கத்தில் இருந்த மாணவரிடம், “என்ன படிக்கிற, நல்லா படி, நல்லா சாப்பிடு” என்று கூறிக்கொண்டிருந்தார். அப்போது அதே பள்ளியைச் சேர்ந்த இடைநிலை வகுப்பு மாணவர்கள் அங்கு வந்தனர். அவர்களிடம் வகுப்பு குறித்தும் சாப்பிட்டீர்களா என்றும் கேட்டறிந்தார்.
பிறகு, 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை இருக்கும் பள்ளிகளில் மாணவர்களுக்குக் காலை உணவு தரப்படுகிறது. ஆனால் உயர்நிலை மற்றும் மேல்நிலையில் இருக்கும் பள்ளிகளில், ‘5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் காலை உணவு கொடுப்பது மாதிரியும், மற்ற மாணவர்களுக்குக் கொடுக்க முடியாத சூழலும் ஏற்படுகிறது’ என்று கூறிய அவர், அருகே இருந்த மதுரை மேயர் இந்திராணியை அழைத்து, “இது தொடர்பாக மாவட்டத்தில் உள்ள அனைத்து உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளின் பட்டியலை எடுத்து நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றுங்கள். பொது ஆர்வலர்கள் யாரெல்லாம் மாணவர்களுக்குச் சாப்பிடுவதற்கு நிதி கொடுக்கிறார்களோ கொடுக்கட்டும். நான் இந்த பள்ளிக்குப் பணம் கொடுக்கிறேன். அப்படி கிடைக்கும் பணத்தை வைத்து இதே ஒப்பந்ததாரரிடம் கொடுத்து அனைத்து மாணவர்களுக்கும் சேர்த்துச் சமைக்கச் சொல்லுவோம். ஒரே பள்ளியில் ஒருவருக்கு உணவு அளித்தும் ஒருவருக்கு உணவு அளிக்காமலும் இருப்பது சரியாக இருக்காது” என்றார்.
அப்போது 7 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் காலையில் சாப்பிடாமல் பள்ளிக்கு வந்ததால் தலைவலி, மயக்கம் ஏற்பட்டதாக கூறினார். அவருக்கு உடனடியாக சாப்பாடு கொடுக்கச் சொன்ன அமைச்சர் பிடிஆர், அந்த மாணவன் சாப்பிடும் வரை அவர் பக்கத்தில் உட்கார்ந்து அவரைப் பற்றிய விவரங்கள் கேட்டுக்கொண்டு முழு சாப்பாட்டையும் சாப்பிட வைத்தார். அப்போது அந்த மாணவரிடம், “என்னடா இவ்வளவு ஒல்லியாக இருக்க. ஒழுங்கா சாப்பிட மாட்டாயா? தினமும் சாப்டுவியா இல்லையா? உன்ன மாதிரி குழந்தைகள் தான் நம் எதிர்காலம். நீ சரியா சாப்டாம இப்படி இருந்தால் வயசான காலத்துல நாங்க எல்லாம் என்னப் பன்றது” என்று கேட்டார். அதற்கு, ‘கடந்த வருடம் மஞ்சள் காமாலை வந்தது’ என்றார் அந்த மாணவர். உடனடியாக உதவியாளரை அழைத்து, “இந்த பையன் ரொம்ப ஊட்டச்சத்து குறைபாடோட இருக்கான். இவனை நம்ம டீன் கிட்ட காட்டி தேவையான சிகிச்சை அளிக்க சொல்லுங்கள்” என்றார். பிறகு “இந்த பள்ளிக்கு மருத்துவ முகாம் ஒன்று நடத்துவோம்” என்றும் கூறினார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வரும் நிலையில் அமைச்சர் பிடிஆரின் பரிந்துரைக்கு சமூக வலைத்தளங்களில் லைக்ஸ்கள் குவிந்து வருகின்றன.