கர்நாடக மாநிலத்தில் அதிக மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு அளவுக்கு அதிகமாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியதால் உபரி தண்ணீர் காவிரி மற்றும் கொள்ளிடத்தில் திறந்து விடப்படுகிறது. இந்த தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் அதிகமான அளவுக்கு செல்கிறது. கீழணையில் 8 அடி தண்ணீரை மட்டுமே தேக்க முடியும் என்பதால் கொள்ளிடம் ஆற்றில் விநாடிக்கு 2 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இதனால் கொள்ளிடம் கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. இந்த நிலையில் சிதம்பரம் அருகே உள்ள தீவு கிராமங்களான அக்கரை ஜெயங்கொண்டம், கீழகுண்டலபாடி, திட்டுக்காட்டூர் ஆகியவற்றில் குடியிருப்பு பகுதியில் வெள்ள நீர் புகுந்தது. பொதுமக்கள் புயல் பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டு வருகிறது.
வருவாய், ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் இக்கிராமங்களில் முகாமிட்டுள்ளனர். இந்த நிலையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் வெள்ள நீர் சூழ்ந்த தீவு கிராமங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் புயல் பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த பொதுமக்களிடம் எத்தனை நாட்களாக தங்கி இருக்கிறீர்கள். உணவு, குடிநீர் வழங்கப்படுகிறதா? தேவையான வசதிகள் செய்து தரப்படுகிறதா? என்றும் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம், சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவு தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் அதிக மழை பெய்வதால் இந்த பகுதி 5 வது முறையாக தண்ணீரால் சூழப்பட்டுள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தினர். தண்ணீர் சூழ்ந்துள்ள பகுதியில் உள்ள பொதுமக்களை மீட்டு புயல் பாதுகாப்பு மையம் உள்ளிட்ட பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. தண்ணீர் சூழ்ந்த கிராமங்களில் மட்டும் பாதிக்கப்பட்ட வயல்கள், வீடுகள் கணக்கெடுப்பு நடத்தி அவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சிவபுரி- பெராம்பட்டு சாலை சீரமைக்கப்படும்" என்றார்.
மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அன்சூல் மிஸ்ரா, மாவட்ட ஆட்சியர் .பாலசுப்ரமணியம், சிதம்பரம் வருவாய் கோட்டாட்சியர் ரவி, சிதம்பரம் நீர்வளத்துறை செயற்பொறியாளர் காந்தரூபன், உதவி செயற்பொறியாளர்கள் குமார், ஞானசேகர், சிதம்பரம் வட்டாட்சியர் ஹரிதாஸ், சிதம்பரம் எஸ்.பி ரகுபதி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.