வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ரயில்வே ஜங்சன் அருகே ஒரு மரத்தில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார் என ஜோலார்பேட்டை போலீஸாருக்கு அக்டோபர் 23ந் தேதி மாலை தகவல் வந்தது. போலீஸார் அங்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
விசாரணையில் தற்கொலை செய்துக்கொண்டவர் சின்னத்திரையில் பல சீரியல்களுக்கு ஒளிப்பதிவாளராகவும், சில நாடங்களில் தலைக்காட்டியவருமான சசிகுமார் என்பது தெரியவந்தது. அவரது பாக்கெட்டில் இருந்த பர்ஸில், கடந்த 22ந்தேதி இரவு பெங்களுரூவில் இருந்து ஆம்பூர் வரை ரயில் டிக்கட் எடுத்திருப்பது தெரியவந்தது. 23ந் தேதி விடியற்காலை ஜோலார்பேட்டையிலேயே இறங்கிவிட்டதாக கூறப்படுகிறது.
தற்கொலை செய்துக்கொண்ட சசிகுமார்க்கு, ராகவி என பெயருடைய மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். சசிகுமார் தற்கொலை செய்துக்கொண்ட தகவலை அவரது மனைவிக்கு தெரியப்படுத்தினர். 24ந் தேதி ஜோலார்பேட்டை வந்த அவரது மனைவியிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது, ஒளிப்பதிவாளராக ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார் சசிகுமார். அதே நிறுவனத்தில் பணியாற்றுபவர் மகேஷ். இருவரும் நண்பர்கள். மகேஷ்சின் வீடியோ கேமராவை சசிகுமார் வாங்கி சென்றுள்ளார். அதை திருப்பி தருவதில் இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது.
மகேஷ், சசிகுமார் பற்றி ஒளிப்பதிவாளர்கள் உள்ள வாட்ஸ்அப் குருப்பில் விமர்சனம் செய்து ஆடியோ பதிவிட்டுள்ளார். இது குழுவில் காரசாரமான விவாதமாக நடைபெற்றுள்ளது. அதோடு சசிகுமார் மீது காவல்நிலையத்தில் புகார் தந்துள்ளார் மகேஷ், அதோடு சசிகுமாரை மிரட்டவும் செய்தார். இதனால் மனவேதனையில் இருந்தார் எனக்கூறியுள்ளார் அவரது மனைவி. தனது கணவர் தற்கொலையில் சந்தேகம் உள்ளதாக புகார் தர அதனை ஏற்று புகாரை பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறது ஜோலார்பேட்டை போலீஸ்.
அதோடு, சசிகுமாரின் வாட்ஸ்அப் குழுக்களில் உள்ள தகவல்களை போலீஸார் கைப்பற்றி, அதில் உள்ள தகவல்களை அடிப்படையாக கொண்டு விசாரணை நடத்திவருகின்றனர். வாட்ஸ்அப் குழுவில் பதிவிட்ட ஆடியோ ஒருவரின் உயிரை பலிவாங்கியுள்ளது.