புதுக்கோட்டையில் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனை திருச்சி மாவட்ட சிலம்பம் சங்கச் செயலாளர் மாஸ்டர் கலைச்சுடர்மணி எம். ஜெயக்குமார், உலக சிலம்ப இளைஞர் சம்மேளனம் தலைவர் மற்றும் இந்திய சிலம்ப கோர்வை தலைவர் இரா. மோகன், சிலம்பத்தில் பல உலக சாதனைகள் மற்றும் சர்வதேச சிலம்ப விளையாட்டு வீராங்கனை மோ.பி. சுகித்தா, பயிற்சியாளர் எம். சிவராமன் ஆகியோர் நேரில் சந்தித்தனர்.
அப்போது திருச்சியில் ஒலிம்பிக் அகாடமி தொடங்க இருப்பது எங்களைப் போன்ற விளையாட்டில் சாதிக்க இருக்கும் மாணவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் எனவும், மேலும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பத்தையும் தேசிய அளவிலான விளையாட்டுகளில் கொண்டு வந்தால் எங்களைப் போன்றோருக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும் எனவும் அமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர். கோரிக்கையைக் கேட்ட அமைச்சர், “நிச்சயமாக உங்கள் கோரிக்கையைப் பரிசீலித்து தேசிய விளையாட்டில் சிலம்பத்தை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதியளித்தார். மேலும், சிலம்பத்தில் 12 வயதிலேயே பல உலக சாதனைகள், தேசிய, சர்வதேச சிலம்ப போட்டிகளில் பங்கேற்று வெற்றிகளைக் குவித்த திருச்சி மோ.பி. சுகித்தாவை வாழ்த்திப் பாராட்டினார்.