புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அறிவொளி நகரில் (நரிக்குறவர் காலனி) எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் அங்கு வைக்கப்படும் பதாகைகள் வித்தியாசமாகவும் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைப்பதாகவும் இருக்கும். அதேபோல் இன்று அந்த பகுதியில் நடக்கும் பாலமுருகன் - பானு திருமண விழாவிற்கு வைக்கப்பட்டிருந்த ஒரு பதாகை அந்த வழியாகச் செல்லும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஒரு பிரபலமான நாளிதழ் மாடலில் அமைக்கப்பட்டுள்ள அந்த பதாகையில் திருமண சட்டப்படி 2 ஆண்டுகளாகக் காதலித்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை! என்றும் வாழ்த்துவோருக்கு கல்யாணப் பந்தியில் கலவரம்! பந்தியில் பலகாரம் திருட்டு 3 பேர் கைது! மணப்பெண் தேவை! எனப் பல்வேறு தலைப்புகளில் செய்திகள், விளம்பர வடிவில் அமைக்கப்பட்ட அந்த பதாகையைப் பார்த்த அனைவரையும் கவர்ந்து இழுத்தது. அதேபோல அறிவொளி நகரில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தவறாமல் கலந்து கொள்ளும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் இந்த திருமணத்திற்கும் வந்து மணமக்களை வாழ்த்தினார்.
அப்போது திடீரென ஒரு புதுமணத் தம்பதி மாலையும் கழுத்துமாக வந்து நிற்க அவர்களையும் வாழ்த்தி கல்யாணப் பரிசுகள் வழங்கினார். நாங்கள் அமைச்சரை போய் அழைக்கவில்லை என்றாலும் எங்கள் இல்லங்களில் நடக்கும் எல்லா விழாக்களுக்கும் தகவல் தெரிஞ்சாலே வந்துடுவார். அப்படித்தான் இன்றும் வந்து வாழ்த்தினார். இன்றைக்கு 2 ஜோடிகளை வாழ்த்தி கல்யாணப் பரிசு தந்திருக்கிறார். பழங்குடியினர் மக்கள் மீது எப்பவும் பாசமாக இருக்கும் அமைச்சரை எப்பவும் மறக்கமாட்டோம் என்றனர்.
அமைச்சர் மெய்யநாதனோ, “கீரமங்கலம் அறிவொளி நகர் மட்டுமின்றி எனது தொகுதியில் மட்டும் இல்லாமல் நான் செல்லும் வழியில் உள்ள ஊர்களில் இதுபோன்ற பழங்குடியினர் வீடுகளில் நடக்கும் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் அவங்க அழைக்கவில்லை என்றாலும் நான் போய்விடுவேன். திடீரென நான் போனதும் அவங்களுக்கு எல்லையில்லா மகிழ்ச்சியை பார்க்க முடிகிறது. அந்த மகிழ்ச்சி தான் எனக்கும் மகிழ்ச்சி. கடந்த 3 வருடமாக அறிவொளி நகரில் நடக்கும் திருமண விழாக்களுக்கு எனக்கு அழைப்பு இல்லை என்றாலும் கூட என் மேல் உள்ள பாசத்தில் என் படம் போட்டு பதாகை வைக்கிறார்கள். தகவல் தெரிஞ்சா உடனே வந்துவிடுவேன். இன்று கூட ஒரு திருமண தகவல் தெரிஞ்சது. ஆனால் உள்ளே வந்ததும் இன்னொரு திருமண ஜோடி வந்தாங்க. அவங்களையும் வாழ்த்தினேன். பழங்குடியினர் இட ஒதுக்கீட்டை பயன்படுத்திக் கொண்டு தொடர்ந்து படித்து அவர்களும் நல்ல வேலைகளுக்கு போகவேண்டும் என்று ஒவ்வொரு இடத்திலும் பேசி படிப்பை தூண்டி வருகிறேன். இப்போது அறிவொளி நகரில் அனைத்து குழந்தைகளும் பள்ளிக்கு செல்கிறார்கள் என்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.