புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை தொகுதி முட்டுக்காடு ஊராட்சி இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்களுக்கு குடிதண்ணீர் வழங்கும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மர்ம நபர்கள் இயற்கை உபாதை கழித்த சம்பவத்தில் நடவடிக்கை எடுக்க கோரி சிபிஎம் எம்எல்ஏ சின்னத்துரை, கிராம மக்கள் உள்பட பலரும் கோரிக்கை வைத்திருந்த நிலையில் செவ்வாய்க் கிழமை மாவட்ட ஆட்சியர் கவிதாராமு, மாவட்ட எஸ்.பி வந்திதா பாண்டே உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை செய்தனர்.
விசாரணையில் தங்கள் கிராமத்தில் உள்ள அய்யனார் கோயிலுக்குள் பட்டியலின மக்களை சாமி கும்பிட அனுமதிப்பதில்லை. இரட்டை குவளை முறை உள்ளது என்றும் இந்த கிராமத்தில் தீண்டாமை உள்ளது என்றும் கூறினார்கள். அந்த கோரிக்கையையடுத்து மாவட்ட ஆட்சியர் பட்டியலின மக்களை அய்யனார் கோயிலுக்கு அழைத்துச் சென்று சாமி கும்பிட வைத்து, சாமி அனைவருக்குமானவர் என்றார். அப்போது சாமியாடி இழிவாகப் பேசிய பெண்ணை கைது செய்தனர். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள டீ கடைக்குச் சென்று இரட்டை குவளை இருப்பதைக் கண்டறிந்து கைது செய்தனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நேற்று புதன் கிழமை இலுப்பூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த சமாதான பேச்சுவார்த்தையில் அனைத்து தரப்பு மக்களும் ஒன்றாக இணைந்து சாமி கும்பிடுவதாக முடிவானது. இதனையடுத்து இன்று அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, கந்தர்வக்கோட்டை எம்.எல்.ஏ சின்னத்துரை மற்றும் பலர் அய்யனார் கோயிலுக்குச் சென்றபோது கிராமத்தின் சார்பில் மாலைகள் அணிவித்து வரவேற்றனர்.
பொங்கல் வைத்து அனைவரையும் அழைத்து சமத்துவ வழிபாடு செய்ய வைத்தனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மெய்யநாதன், “குடிதண்ணீர் தொட்டியில் கழிவுகள் கலந்த மர்ம நபரை போலீசார் விரைவில் கைது செய்து நடவடிக்கை எடுப்பார்கள். அதற்கான பணிகளில் முழுமையாக ஈடுபட்டுள்ளனர். கழிவுகள் கலக்கப்பட்ட தண்ணீர் தொட்டிக்கு பதிலாக அதே பகுதியி்ல் புதிய தண்ணீர் தொட்டி கட்டும் பணி சில நாட்களில் தொடங்கப்பட உள்ளது. மேலும் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்பது போல பாகுபாடின்றி அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும். தீண்டாமை சம்பவத்தில் மாவட்ட ஆட்சியர் உள்பட அனைவரும் சிறப்பாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்துள்ளனர்” என்றார்.