‘ஒரே ராத்திரியில் நடந்த சோகம்; 122 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த விநோதம்’ என சீர்காழி மழைவெள்ளம் குறித்தும், இருவகொள்ளை கிராமத்தில் மெழுகுவர்த்தி கூட இல்லாமல் சாலை துண்டிக்கப்பட்டு மக்கள் தவிப்பதையும் நமது நக்கீரன் இணையத்தில் செய்தியாக்கியிருந்தோம்.
அதனைக் கண்ட பூம்புகார் எம்.எல்.ஏ. நிவேதா முருகன், சீர்காழி எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் உள்ளிட்டோர் டிராக்டர், பைக்கில் சென்று அம்மக்களுக்கு ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினர். மேலும், பல்வேறு பகுதிகளில் கரண்ட் இல்லாத இடங்களில் ஜெனரேட்டர் வரவழைக்கப்பட்டு கரண்ட் கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கரண்ட் இல்லாத எந்தப் பகுதியிலும் ஜெனரேட்டர் நிறுத்தப்படக் கூடாது என உத்தரவிட்டார்.
தமிழகத்திலேயே அதிக மழையாக ஒரே நாளில் 44 சென்டிமீட்டர் மழை பதிவாகி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுக்காவில் ஐந்தாவது நாளாக அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். சீர்காழி அருகே வேம்படி, வாடி, தாண்டவன்குளம், வேட்டங்குடி பகுதிகளில் ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து தண்ணீரால் சாலை முழுவதும் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்ட வாடி, இருவகொள்ளை கிராமங்களை டிராக்டர் மூலம் சென்று பார்வையிட்ட அமைச்சர் மெய்யநாதன் அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த போது, “வெள்ளம் பாதித்தப் பகுதிகளில் தண்ணீர் வடிவதற்கான பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. கடந்த காலங்களில் சரியான முறையில் வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரப்படாததை காணமுடிகிறது. அவற்றை தற்போது தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு தண்ணீர் வடிவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் பேரில் வடிகால் ஆக்கிரமிப்புகளை அகற்றி தண்ணீர் செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்படும். வெள்ளம் அதிகம் பாதித்த சீர்காழி, தரங்கம்பாடி தாலுக்காவில் உள்ள 1 லட்சத்து 6 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கும் வெள்ள நிவாரணமாக ரூபாய் 1000 வழங்கப்படும்.” என்று கூறினார்.