நெல் ஈரப்பத அளவை உயர்த்த தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளதாக அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ், "தமிழகத்தில் விவசாயிகளைப் பாதுகாக்கும் அரசாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அக்டோபர் 1- ஆம் தேதி முதல் தற்போதுவரை 842 நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது.
நெல்லின் ஈரப்பதம் அதிகமாக இருந்தாலும் கொள்முதல் செய்ய வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சரின் உத்தரவின் பேரில் நெல்லின் ஈரப்பதம் அதிகமாக இருந்தாலும் நெல் கொள்முதல் செய்யப்பட்டு அரவைக்கு அனுப்பப்படுகிறது. ஈரப் பதத்தைக் காரணம்காட்டி நெல் மூட்டைகளைக் கொள்முதல் செய்யாமல் இருக்கக் கூடாது என்று உத்தரவு உள்ளது. தி.மு.க ஆட்சியில் குறுவை சாகுபடியின் போது 6 லட்சம் மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது. நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் 60 லட்சம் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
காரீப் பருவத்தில் 32.41 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 17 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக உயர்த்த தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது. நெல் ஈரப்பதம் தொடர்பாக ஆய்வு செய்ய விரைவில் மத்திய அரசு அதிகாரிகள் தமிழகம் வரவுள்ளனர். நெல் கொள்முதல் செய்யப்பட்ட 24 மணிநேரத்தில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படுகிறது. விவசாயிகளின் அனைத்து நெல் மூட்டைகளும் கொள்முதல் செய்யப்படும்; விவசாயிகள் அச்சப்பட வேண்டாம்." இவ்வாறு அமைச்சர் பேசினார்.