பண்ருட்டி அருகே ஏரிப்பாளையம் - செம்மேடு கிராமங்களுக்கு இடையே நெடுஞ்சாலைத்துறை நபார்டு கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ. 16.30 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் கட்டும் பணியைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார்.
இதில் சிறப்பு அழைப்பாளராகத் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ. கணேசன் அடிக்கல் எடுத்து வைத்துப் பணியைத் தொடங்கி வைத்தார். முன்னதாக பண்ருட்டி அருகே உள்ள மருங்கூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், “தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சி பொறுப்பேற்றது முதல் பொதுமக்கள் நலன் கருதி அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், அரசுப் பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ. 1000 உதவித்தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டம் என மாணவ - மாணவிகளின் நலன் கருதி பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். கடலூர் மாவட்டத்தில் 2023-24 ஆம் ஆண்டில் 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவ - மாணவிகள் 2069 பேருக்கு விலை இல்லா மிதிவண்டி வழங்கப்பட உள்ளது.
மேலும் ஏரிப்பாளையம் - செம்மேடு கிராமத்திற்கு இடையே கெடிலம் ஆற்றில் தற்போது உள்ள பாலம் 1974 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. பாலம் பழுதடைந்த நிலையில் உள்ளதால் தற்போது நெடுஞ்சாலைத்துறை நபார்டு கிராம சாலைகள் திட்டம் மூலம் எட்டு கண்கள் கொண்ட 19 மீட்டர் நீளம் 12 மீட்டர் அகலத்தில் உயர்மட்ட பாலமாக கட்டப்பட உள்ளது. இப்பாலம் அமைப்பதன் மூலம் 10 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பயனடைவார்கள் மேலும் மழைக் காலங்களில் போக்குவரத்திற்கு இடையூறின்றி செல்லும் வகையில் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்” எனக் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. ராஜேந்திரன், பண்ருட்டி ஒன்றிய குழு தலைவர் சபா.பாலமுருகன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பழனி, நபார்டு கிராம சாலைகள் அலகின் கோட்ட பொறியாளர் வெள்ளிவேல் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.