திண்டுக்கல் ஒன்றியம், சிறுமலை ஊராட்சியில் ரூ.36.75 மதிப்பில் கட்டப்பட்ட புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத் திறப்பு விழா மற்றும் ரூ.75 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நூற்றாண்டு விழா பள்ளிக் கட்டிடத் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பெ.திலகவதி தலைமை தாங்கினார்.
திண்டுக்கல் கோட்டாட்சியர் சக்திவேல், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பொருளாளர் கு.சத்தியமூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் நடராஜன், முன்னாள் எம்எல்ஏ நத்தம் ஆண்டி அம்பலம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அண்ணாதுரை, ராஜசேகர், ஒன்றிய செயலாளர்கள் வெள்ளிமலை, நெடுஞ்செழியன், திண்டுக்கல் ஒன்றிய பெருந்தலைவர் ராஜா, துணை பெருந்தலைவர் சோபியாராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்றத்தலைவர் சங்கீதா வெள்ளிமலை வரவேற்றார்.
நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்துவிளக்கு, ஏற்றிய பின்பு பொதுமக்கள் மத்தியில் பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, “மலைகிராங்களிலும், சாலைவசதி, தெருவிளக்கு வசதி, குடிதண்ணீர் வசதி நூறு சதவிகிதம் கிடைக்கிறது என்றால் அதற்கு ஒரே காரணம் கலைஞர் வழியில் வந்த தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மக்களுக்கான ஆட்சியே காரணம். மலைக்கிராமங்களில் படிக்கும் பள்ளி மாணவர்கள் பாதுகாப்பான முறையில் சுத்தமான, சுகாதாரமான, காற்றோட்டமான அறையில் கல்வி கற்பதற்காக இன்று ரூ.75லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதைப் பள்ளி மாணவர்கள் பயன்படுத்திக் கொண்டு உயர்கல்வி கற்கும் அளவிற்கு உயர வேண்டும். 14 வருடங்களுக்கு முன்பு திமுக ஆட்சியின்போது நான் வருவாய்த்துறை அமைச்சராக இருந்தேன். அப்போது இங்குள்ள மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுத்தபோது ஆட்சிமாற்றம் ஏற்பட்டது. அதன்பின்னர் வந்த ஆட்சியாளர்களோ(அதிமுக) குடியிருக்கும் மக்களுக்கு முறையாக பட்டா வழங்கவில்லை. திமுக ஆட்சியில் தான் வழங்கப்பட்டது.
முன்பு நான் கவிப்பேரரசு வைரமுத்துவுடன் சிறுமலைக்கு வந்தபோது, அவர் எழுதிய, ‘சின்ன சின்ன ஆசை... சிறகடிக்க ஆசை...’ பாடல் தான் தேசிய விருது பெற்றது. எனக்கும் சின்ன சின்ன ஆசைகள் உண்டு. அவ்வப்போது சிறுமலைக்கு வந்து இங்குள்ள மக்களின், குறிப்பாக மலைவாழ் மக்களின் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற ஆசை உண்டு. அலுவல் பணி காரணமாக வரமுடியவில்லை. சட்டமன்ற கூட்டத் தொடர் முடிந்தவுடன் சிறுமலைக்கு வந்து ஒருநாள் முழுவதும் தங்கி மக்களின் குறைகளை கேட்டறிந்து அதை நிவர்த்தி செய்வேன்.கலைஞரின் வீடு வழங்கும் திட்டம் மலைக்கிராம மக்களுக்கு வரப்பிரசாதமான திட்டமாகும். இதை மலைவாழ் மக்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியின்போது ஒன்றிய துணைப் பெருந்தலைவர் சோபியாபாஸ்கர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாரிமுத்து, தாமோதரன், உதவிப் பொறியாளர் பாலசுப்ரமணி, சிறுமலை ஊராட்சி மன்றத் துணைதலைவர்கள் குமார், ஓ.எம்.வெற்றி, நத்தம் பேரூராட்சித்தலைவர் ஷேக்சிக்கந்தர்பாட்சா, அகரம் பேரூராட்சி மன்றத் தலைவர் நந்தகோபால், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் முருகானந்தம், விவசாய அணி அமைப்பாளர் இல.கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் அக்பர், திண்டுக்கல் தெற்கு ஒன்றிய அவைத்தலைவர் குருசாமி, ஒன்றிய பொறுப்பு குழு உறுப்பினர்கள் சுப்புலட்சுமி, ராதாகிருஷ்ணன், செந்தில்குமார், ஒன்றிய குழு உறுப்பினர் முத்து, சிறுமலை ஊராட்சி கிளைக்கழக நிர்வாகிகள், கழக முன்னோடிகள், இளைஞரணியானர் மற்றும் சார்பு அணியினர், மகளிரணியானர் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.