கடலூர் மாவட்டம் நெய்வேலி நகரியத்தின் நுழைவு வாயில் அருகே நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனம் சார்பில் நமது ஊர், நமது மக்கள், நமது சேவைகள் என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இலவச பேருந்து சேவை திட்டத்தைத் துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு என்எல்சி இந்தியா நிறுவன தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் பிரசன்ன குமார் மோட்டுப்பள்ளி தலைமையேற்றுக் கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.
பின்னர் இது குறித்து அவர், “கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி நெய்வேலியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் என்எல்சி நிறுவனம் சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இலவச பேருந்து சேவை திட்டம் வெகு விரைவில் செயல்படுத்தப்படும் என அறிவித்தேன். இந்த அறிவிப்பை உடனடியாக நடைமுறைக்குக் கொண்டு வரும் வகையில் ஆகஸ்ட் 20-ஆம் தேதி முதல் நெய்வேலி பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இலவச பேருந்து சேவை திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
நெய்வேலி நகரியத்தில் 38 பள்ளிகள் மற்றும் ஒரு கல்லூரியில் சுமார் 30 ஆயிரம் மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள். மேலும் பல்வேறு சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து நெய்வேலி நகரியத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி கற்கும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயன் பெறுகிற வகையில் சிறந்த வசதிகளை வழங்கும் முயற்சிக்காக இந்த இலவச பேருந்து சேவை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு திட்டத்தின் மூலம் நெய்வேலி பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களும் நெய்வேலி நுழைவு வாயில் மற்றும் மந்தாரக்குப்பம் ஆகிய இடங்களில் இருந்து இலவசமாகப் பயணிக்கும் வகையில் பேருந்துகள் சேவை வழங்கப்படுகிறது. இதனை மாணவர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு கல்வி கற்று நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும்” எனப் பேசினார்.
இவ்விழாவில் என்எல்சி இந்திய நிறுவன மனிதவள துறை இயக்குனர் சமீர் ஸ்வரப் மற்றும் நெய்வேலி மோட்டார் வாகன ஆய்வாளர் பிரான்சிஸ், என்எல்சி இந்தியா நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள், அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள் உள்ளிட்ட என்எல்சி ஊழியர்கள், பள்ளிகளின் ஆசிரியர்கள் மாணவர்களின் பெற்றோர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.