தமிழ்நாட்டில் ரேஷனில் பொருட்கள் வாங்க தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயமாக்கப்படுமா என்ற கேள்விக்கு உணவுத்துறை அமைச்சர் விளக்கமளித்துள்ளார். தமிழ்நாட்டில் கரோனா தொற்று கடந்த ஒரு மாதமாக குறைந்த நிலையில், கடந்த சில நாட்களாக சிறிய அளவில் தொற்று எண்ணிக்கை உயர்ந்துவருகிறது. இதனால் தமிழ்நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணிகள் துரித கதியில் நடைபெற்றுவருகிறது. மேலும், தடுப்பூசி போடுவதை துரிதப்படுத்தும் வகையில் பல மாவட்டங்களில் தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அடுத்தக்கட்டமாக ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்குவதற்குத் தடுப்பூசி போடுவது கட்டாயமாக்கப்படும் என்று தகவல் வெளியாகியிருந்தது. இதனால் தடுப்பூசி போடாதவர்கள் இதுதொடர்பாக குழப்பமடைந்துள்ள நிலையில், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி விளக்கமளித்துள்ளார். திருவாரூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "தற்போதுவரை, தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே ரேஷன் வழங்கப்படும் என்று வெளியான செய்தி உண்மையல்ல. அவ்வாறு இதுவரை தமிழக அரசு எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை" என்றார்.