திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் அனைத்துத் துறை வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சக்கரபாணி, “திருவாரூர் மாவட்டத்தில் 58,721 பேர் குடிசை வீட்டில் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு கலைஞர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் மாடி வீடுகளாக மாற்ற நடவடிக்கை மேற்கொண்டுவரப்படுகிறது. எரிவாயு இணைப்புகள் இல்லாத 82,000 குடும்பங்களுக்கு எரிவாயு நிறுவன முகவர்கள் மூலம் அவர்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த கூட்டத்தில் தெரிவித்திருந்தேன். அதனடிப்படையில் இதுவரை 34,000 நபர்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள 48,000 குடும்பங்களுக்கும் அந்தந்த பகுதிகளிலுள்ள நியாய விலைக் கடை பதிவேட்டில், எரிவாயு இணைப்பு இல்லாதவர்களை கண்டறிந்து அவர்களிடம் எரிவாயு இணைப்பு திட்டம் தொடர்பாக எடுத்துக்கூறி பயனாளிகள் பயன்பெறும் வகையில் இவ்வாண்டு செப்டம்பர் மாதமே அறுவடை காலம் துவங்கப்படவுள்ளதால் நெல்லிற்கான ஆதார விலையினை செப்டம்பர் மாதம் வழங்க முதல்வர் மத்திய அரசிடம் கேட்டதன் அடிப்படையில் இந்தாண்டு செப்டம்பர்-1 ம் தேதி முதல் நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளின் நெல்லிற்கு ஆதார விலை ரூ.100 உயர்த்தி வழங்கப்படும்.
நேரடி கொள்முதல் நிலையங்களில் ஏதேனும் குற்றங்கள் அல்லது குறைபாடுகள் இருப்பின் அதனை விவசாயிகள் தெரிவிக்க, அனைத்து நேரடி கொள்முதல் நிலையங்களிலும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத் துறை சம்பந்தப்பட்ட அனைத்து அலுவலர்களின் தொடர்பு எண் பலகை வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், அனைத்து மாவட்டங்களிலும் நேரடி நெல் கொள்முதல் தொடர்பான புகார்களை தெரிவிக்க கொள்முதல் நிலையங்களில் மனுப்பெட்டி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் நெல் கொள்முதல் தொடர்பாக புகார்களை தெரிவிக்க தனித்தனியே இலவச தொலை பேசி எண்ணும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
விவசாயிகளின் தேவைகளை அறிந்து, அவர்களின் நெல்லினை பாதுகாப்பாக வைத்திட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் போதுமான அளவு சாக்கு, சணல், தார் பாய்கள் கூடுதலாக இருப்பு வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வாயிலாக விவசாயிகளிடம் 1000 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. தேவையிருப்பின் விவசாயிகளிடம் காலம் தாழ்த்தாமல் தினந்தோறும் 2000 நெல் மூட்டைகளும் கொள்முதல் செய்ய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.