சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் முன்னாள் நீதிபதிகள் பேரணி நடத்தியது துரதிர்ஷ்டவசமானது எனத் தலைமை நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்ற வளாகம் முழுமைக்கும் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் (சி ஐ எஸ் எஃப்) பாதுகாப்பை அமல்படுத்தக் கோரிய வழக்கு இன்று தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தியாகிகள் நாளையொட்டி சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நேற்று (30.01.2020) அமைதி ஊர்வலம் நடத்தப்பட்டதற்கு தலைமை நீதிபதி சாஹி கடும் கண்டனம் தெரிவித்தார். இதில், ஓய்வுபெற்ற நீதிபதிகள் (ஹரிபரந்தாமன், கண்ணன் உள்ளிட்டோர்) பங்கேற்றது வேதனை அளிப்பதாகத் தெரிவித்தார்.
“இது நீதிமன்றத்திற்கு மிகப்பெரிய பாதிப்புகளை உருவாக்கும். ஓய்வுபெற்ற நீதிபதிகள் பங்கேற்றதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. இவ்வாறு நீதிமன்ற வளாகத்திற்குள் பேரணியில் பங்கேற்றது நீதிபதிகள் மாண்பை சீர்கெடுக்கும் செயலாக உள்ளது.” என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
நீதிமன்றத்தில், இந்தப் பேரணியின் போது பிரச்சனை நிகழ்ந்திருந்தால் யார் மீது வழக்குப்பதிவு செய்வது? நீதிமன்றம் பொதுச் சொத்து, தனி நபர்களுக்கானது அல்ல என்பதை ஓய்வுபெற்ற நீதிபதிகள் உணர்ந்து செயல்பட வேண்டும். நீதிபதிகளாக இருந்தவர்கள் ஓய்வுபெற்ற பிறகும் நீதிபதிகளாகவே கருதப்படுவர். அவ்வாறு இருக்க வேண்டியவர்கள் நீதிமன்றத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயல்படலாமா? இதை மன்னிக்கவே முடியாது. போராட்டம், பேரணி நடத்துவதற்கான இடம் நீதிமன்றம் இல்லை. நீதிமன்ற வளாகத்தில் அத்துமீறி முன்னாள் நீதிபதிகள் ஹரிபரந்தாமன், கண்ணன், அக்பர் அலி ஆகியோர் பேரணி நடத்தியது குறித்து நீதிமன்ற பாதுகாப்புக் குழு விசாரிக்க வேண்டும்.” என்றனர்.
மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “சென்னை உயர் நீதிமன்றத்திற்கு பாதுகாப்பு இல்லை. வழக்கறிஞர்கள் போர்வையில் நக்சல்கள் அதிகரித்து வருகிறார்கள். அவர்களை நீதிமன்றத்திற்கு வரவிடாமல் தடுக்க முடியவில்லை. இது மட்டுமல்லாமல், நீதிமன்ற வளாகத்திற்குள் குடிப்பது போன்ற சட்ட விரோத நடவடிக்கைகளும் அதிகரித்துள்ளன. எனவே, சென்னை உயர் நீதிமன்ற வளாகம் முழுமைக்கும் சி.ஐ.எஸ்.எப். பாதுகாப்பை விரிவுபடுத்த வேண்டும்.” என்றார்.
இதனையடுத்து, சென்னை உயர் நீதிமன்றம் முழுமைக்கும் சி.ஐ.எஸ்.எப். பாதுகாப்பை நிரந்தரமாக வழங்குவது தொடர்பாக, நீதிமன்ற பாதுகாப்புக் குழு அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கினை மார்ச் 2-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.