தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு அன்பில் அறக்கட்டளை சார்பில் திருவெறும்பூர் தொகுதியைச் சேர்ந்த பிறந்த குழந்தை முதல் 10 வயது வரை உள்ள 7500 பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கான கணக்கை துவக்கி வைத்து அதற்கான பத்திரம் மற்றும் கணக்கு புத்தகத்தை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார். இதில் தமிழக அரசு கொறடா கோ.வி. செழியன், திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், டி ஆர் ஓ அபிராமி, திருச்சி கோட்ட முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளர் சுவாதிமதுர்மா, திருச்சி மாநகர திமுக செயலாளரும் திருச்சி மாநகராட்சி மண்டலம் மூன்றின் தலைவருமான மதிவாணன், பகுதி செயலாளர் நீலமேகம், உட்பட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். முன்னதாக திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி வரவேற்றார். மாநகராட்சி துணை மேயர் திவ்யா நன்றி கூறினார்.
திருவெறும்பூர் அருகே உள்ள எஸ் ஐ டி கல்லூரி மைதானத்தில் நடந்த தமிழக முதல்வரின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட பிறந்த குழந்தை முதல் 10 வயது வரை உள்ள 7500 பெண் குழந்தைகளுக்கு அன்பில் அறக்கட்டளை சார்பில் செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கான பத்திரம் மற்றும் கணக்கு புத்தகம் வழங்கும் விழாவுக்கு தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை வைத்து பேசியதாவது, "அனைவருக்கும் முதலில் மகளிர் தின வாழ்த்துக்கள் திருச்சி சொந்த மாவட்டம். திருவெறும்பூர் சொந்த தொகுதி. இது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் பெயரில் இந்த கணக்கில் சேமிக்க வேண்டும். இந்த சேமிப்பு தொகையை தங்களது குழந்தை பதினோராம் வகுப்பு சேரும் பொழுது அல்லது திருமணத்தின் போது எடுக்கலாம். 2021 ஆம் ஆண்டு அமைச்சர் ஆனதும் தமிழகத்தில் பயிலும் ஒவ்வொரு குழந்தைகளும் எனது குழந்தைகளாக பார்க்கிறேன். பெண்கள் பொருளாதாரத்தில் முன்னேற சேமிப்பு அவசியம். ஆண்கள் சம்பாதித்து செலவு செய்வார்கள். பெண்கள் சேமித்து செலவு செய்வார்கள். அதை ஊக்குவிக்க வேண்டும். பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவிகளுக்கு சேமிப்பு பழக்கத்தை கற்றுக் கொடுக்க வேண்டும் இது ஒவ்வொருவரின் பொறுப்பு ஆகும்.
தமிழக முதல்வர் பெண்கள் சார்ந்த திட்டங்களையே செயல்படுத்துகிறார். ஆட்சிப் பொறுப்பேற்ற முதல் கையெழுத்து பெண்கள் நகரப் பேருந்துகளில் இலவச பயணத்தை தெரிவித்தார். 12 ஆம் வகுப்பிலிருந்து கல்லூரி செல்லும் பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் திட்டத்தையும் கொண்டு வந்துள்ளார். மாணவிகளாகிய நீங்கள் விரும்பிய பதவியை அடைந்து இந்தியாவின் முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்" என்றார்.
கலெக்டர் பிரதீப் குமார் பேசியதாவது, "இந்த செல்வமகள் திட்டம் மகளிர் தினத்தில் நடைபெறுவது மிகவும் சிறப்பானது. பத்து லட்சத்திற்கு மேல் பெண்கள் கொண்ட நகரத்தில் பாதுகாப்பான நகரமாக இந்திய அளவில் சென்னை முதல் நகரமாக விளங்குகிறது. பத்து லட்சத்திற்கு குறைவாக உள்ள மக்கள் தொகை கொண்ட நகரங்களில் இந்திய அளவில் ஐந்து இடங்களில் தமிழகம் பெற்றுள்ளது. அதில் முதல் இடமாக திருச்சி உள்ளது. சாதிக்கும் பெண்கள் அமைதியாகத் தான் இருப்பார்கள். வீட்டில் இருக்கும் பெண்கள் பல சாதனைகளை புரிந்துள்ளார்கள். பெண்கள் எல்லா துறையிலும் சாதித்து விட்டனர். மாணவ மாணவிகள் தங்களது இலக்கை அடைவதற்காக படிப்பதுடன் ஒழுக்கத்தையும் சேர்த்து கற்றுக் கொள்ள வேண்டும். அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்" என்றார்.
திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்ய பிரியா கூறியதாவது, "மாணவிகள் நன்றாக கல்வி கற்பது மூலம் அமைச்சர், டாக்டர், கலெக்டர், போலீஸ் கமிஷனர் என பல்வேறு பதவிகளை அடைய முடியும்.” மேலும் மாணவிகள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். திருச்சி கோட்ட முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளர் சுவாதிமதுர்மா பேசியதாவது, "செல்வமகள் திட்டத்தில் சேருவதற்கு குறைந்து ரூ. 250 வருடத்திற்கு செலுத்த வேண்டும். தற்பொழுது 250 ரூபாய் செலுத்தி கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. 250 முதல் ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் வரை கட்டலாம். இந்த திட்டத்தில் பிறந்த குழந்தை முதல் 10 வயதுள்ள குழந்தைகள் பயன்பெறலாம். 18 வயது ஆகும்போது பாதி தொகையை பெறலாம் 21 ஆண்டு அல்லது திருமணத்தின் பொழுது அது முதிர்வு தொகையை பெறலாம் " என்றார்.