காதலித்து கல்யாணம் செய்த கணவரும் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட, இருவீட்டாரும் அரவணைக்காததால் வாழ்வாதாரம் இல்லாமல் குழந்தையுடன் தவிப்பதாகக் கூறி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி காலில் விழுந்து கதறிய பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சை மாவட்டத்திற்கு 'இல்லம் தேடி முதல்வர்' திட்டப் பொறுப்பாளராக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நியமிக்கப்பட்ட நிலையில், நேற்று (13.12.2021) மாவட்டத்தின் பல இடங்களில் மனுக்கள் பெற்றுவந்தார்.
பேராவூரணியில் நடந்த முகாமில் அமைச்சருடன் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் ஆகியோர் மனுக்கள் வாங்கிக்கொண்டிருந்தபோது, மேடைக்கு ஒரு சிறுவனுடன் வந்த சொப்னாதேவி (22) என்ற இளம்பெண், திடீரென அமைச்சர் காலடியில் அமர்ந்து, “நான் காதல் திருமணம் செய்து 2 வருடங்களுக்கு முன்பு கணவர் இறந்துவிட்டார். காதல் திருமணம் செய்ததால் இருவீட்டார் ஆதரவும் இல்லாமல் 2 வயது குழந்தையுடன் தனியாக தவித்துவருகிறேன். பி.காம் பாதியில் படிப்பை நிறுத்திவிட்டேன். செங்கமங்கலத்தில் வாழ்வாதாரம் இல்லாமல் வசிக்கும் எனது வாழ்க்கைக்கும் குழந்தையின் எதிர்காலத்திற்கும் உதவிகள் செய்ய வேண்டும்” என்று கண்ணீரோடு கதறினார்.
இளம்பெண்ணின் கண்ணீர் கதறல் அனைவரையும் கலங்கவைத்தது. உடனே அந்தப் பெண்ணிற்குத் தேவையான உதவிகள் செய்ய மாவட்ட ஆட்சியரிடம் கூறினார் அமைச்சர் அன்பில் மகேஷ். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.