நீலகிரி மாவட்டம் ஊட்டி, மேட்டுப்பாளையம், சூண்டி, உள்ளிட்ட அத்தனை பகுதிகளும் வரலாறு காணாத மழையின் பாதிப்பில் சிக்கி மலைகள் சரிந்து உயிர்கள், வீடுகள், உடமைகள் அத்தனையும் இழந்து பாதுகாப்பு முகாம்களில் தங்கியுள்ளனர். தங்கள் வீடுகள் உருண்டு பள்ளம் நோக்கி செல்வதை செய்வதறியாது பார்த்துக் கொண்டிருந்த மக்கள் இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை.
எந்த ஒரு உடமையும் இன்றி தன்னந்தனியாக நிர்கதியாக நிற்கும் மக்களுக்கு உதவிக்கரம் நீட்ட தன்னார்வலர்கள் செல்ல வேண்டும். உணவு கிடைக்கிறது ஆனால் குளிரை போக்க கம்பளி இல்லை.சில்லிட்ட தரையில் விரிக்க பாய் இல்லை. வயிற்றுவலியால் அவதிப்படும் இளம் பெண்களுக்கு நாப்கின் இல்லை. அவசர உதவிக்கு மாத்திரைகள் இல்லை அத்தனையும் கிடைத்தால் அவர்களின் மனநிலையிலிருந்து சற்று வெளியே கொண்டு வரலாம்.
இந்த நிலையில் ஒவேலி மற்றும் அப்பகுதி களத்திலிருந்து பேசும் இளைஞர்கள்..
8 மாதங்களுக்கு முன்பு கஜா புயல் டெல்டா மாவட்டங்களை புரட்டிப் போட்டது. அந்த நேரத்தில் அரசாங்கத்தை எதிர்பார்க்காத தமிழகம் முழுவதும் உள்ள இளைஞர்கள் களமிறங்கினார்கள். தங்களால் இயன்ற நிவாரண உதவிகளை செய்த இளைஞர்கள் கிராமங்களில் தங்கி மீட்புப் பணியில் இறங்கினார்கள் சில நாட்களில் கோடிக்கணக்கான மரங்களை ஓரங்கட்டினார்கள்.
இப்படியான இளைஞர்கள் தான் இப்போது நீலகிரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிக்கு வேண்டும். வாருங்கள் இளைஞர்களே உங்கள் உதவிக்காக காத்திருக்கிறோம் என்றனர். இந்த நிலையில் நிவாரண உதவிகள் எங்கே தேவை என்பதை வழிகாட்ட சில இளைஞர்கள் தங்கள் செல்போன் எண்களையும் கொடுத்துள்ளனர். அவர்களை தொடர்பு கொண்டால் வழியும் காட்டுவார்கள்.. அவர்களின் எண்கள்.. 9003990629, 9527119747
புறப்படுங்கள் கஜாவில் மீட்ட இளைஞர்களே..