வேலூர் மாவட்டம், வாணியம்பாடி வளரும் நகராகவுள்ளது. தோல் தொழிற்சாலைகள் மூலம் கோடிக்கணக்கில் அந்நியசெலவாணி ஈட்டித்தரும் நகரம்மது. இந்நகரம் பழைய வாணியம்பாடி, புதிய வாணியம்பாடி (நியூ டவுன்) என இரண்டு பகுதியாக பிரிந்து வளர்க்கிறது.
பழைய, புதிய நகரத்தை பிரிப்பது சென்னை - பெங்களுரூ தேசிய நாற்கார சாலை. பழைய வாணியம்பாடி பகுதியில் இரயில் நிலையம், பேருந்து நிலையம், வர்த்தகபகுதி, நீதிமன்றம், காவல்நிலையம், அரசு மருத்துவமனை எனவுள்ளது. புதிய வாணியம்பாடியில் 25 சதவித மக்கள் தொகையும், கல்லூரிகளும், நகராட்சி அலுவலகம் உள்ளன. பழைய வாணியம்பாடியில் இருந்து நியூடவுன் என்கிற புதிய வாணியம்பாடிக்கு செல்லும் சாலைக்கு ஆலங்காயம் சாலை எனப்பெயர்.
இந்த சாலையில் ஒரு ரயில்வே கேட் உள்ளது. இந்த கேட்டை 9 மாதங்களுக்கு முன்பு நிரந்தரமாக மூடி சாலையில் பள்ளம் தோண்டிவிட்ட இரயில்வே துறை, சுரங்கப்பாதை அமைக்கப்போகிறோம் என்றது.
இதுப்பற்றி நம்மிடம் பேசிய முக்கிய பிரமுகர்கள் சிலர், வாணியம்பாடியில் இருந்த நியூடவுன் பகுதிக்கு செல்ல ஆலங்காயம் சாலை வழியாகத்தான் செல்ல வேண்டும். இந்த சாலையில் ரயில் ரோடு க்ராஸ் செய்வதால் 30 ஆண்டுகளுக்கு முன்பு சுரங்கப்பாதை அமைத்து தந்தார்கள்.
அந்த வழியாக தான் இருசக்கர வாகனங்கள், கார்கள், ஆட்டோ என சென்றுவந்தது. சாலை போடுகிறோம் என அதன் உயரத்தை அதிகப்படுத்த அதிகப்படுத்த மழைக்காலங்களில் சுரங்கப்பாதைக்குள் தண்ணீர் சென்று தேங்கியதால் அது நிரந்தர சாக்கடையாக மாறிவிட்டது. இதனால் மேற்புறமாகவே சென்றுக்கொண்டு இருந்தோம்.
தற்போது இரயில் போக்குவரத்து அதிகமாகி அடிக்கடி ரயில்வே கேட் மூடப்படுவதால் இந்த இடத்தில் மீண்டும் அகலமான நிலையில் சுரங்கப்பாதை அமைத்து தர வேண்டும் என பல ஆண்டுகளாக மக்கள், வியாபார அமைப்புகள், பொதுநல இயக்கங்கள் கோரிக்கை வைத்துவந்தனர்.
கடந்தாண்டு இரயில்வேத்துறை சுரங்கபாதை அமைக்க 16 கோடி நிதி ஒதுக்கீடு செய்து டெண்டர் விட்டுள்ளது. நகராட்சி சார்பில் குடிநீர் குழாய், டெலிபோன் கேபிள் போன்றவற்றை அகற்றி தர வேண்டும். அதை செய்ய நகராட்சி தாமதம் செய்வதால் கடந்த 9 மாதமாக அந்த சாலை மூடப்பட்டுள்ளது.
இதனால் புதிய வாணியம்பாடியில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள், ஆலங்காயம் மற்றும் அதனை சுற்றியுள்ள 100க்கும் அதிகமான கிராம மக்கள் தினமும் 4 கி.மீ தூரம் சுற்றிக்கொண்டு பழைய வாணியம்பாடி நகரத்துக்கு வந்து செல்கிறார்கள். தினமும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து கல்லூரிக்கு 4 கி.மீ சுற்றிக்கொண்டு நியூடவுன் பகுதிக்கு செல்கிறார்கள். இதை நகராட்சி அதிகாரிகளும் கண்டுக்கொள்ளவில்லை. இந்த நகரத்தில் உள்ள அமைச்சர் நிலோபர்கபிலும் கண்டுக்கொள்ளவில்லை.
சுரங்கப்பாதை அமைக்கறதுக்காக அருகில் உள்ள தனியார் இடங்கள் சிலவற்றை கையகப்படுத்தனும் அந்த வேலையை இன்னும் ஆரம்பிக்கவேயில்லை. ஆனால் அதற்குள் சாலையை மூடிட்டாங்க. இரயில்வேயிடம் கேட்டால் நகராட்சியை கைக்காட்டுகிறார்கள். நகராட்சி ஆணையாளரோ, இரயில்வேயை கைக்காட்டுக்கிறார்.
இதனால் பேருந்துகள் வாணியம்பாடி நகருக்குள் வராமல் நியூடவுன் பகுதியிலேயே பயணிகளை இறக்கிவிட்டுவிட்டு சென்றுவிடுகிறார்கள். அங்கிருந்து மக்கள் வாணியம்பாடி நகருக்கு வர ஆட்டோ பிடித்தால் குறைந்தது 100 ரூபாயாகிறது. பள்ளி பிள்ளைகளை ஏற்றிச்செல்லும் ஆட்டோ மற்றும் வேன் கட்டணங்கள் உயர்ந்துவிட்டது என்றார்கள்.
இந்நிலையில் சுரங்கப்பாதை அமை அல்லது மூடப்பட்ட கேட்டை திறந்துவிடு என்கிற கோரிக்கையை முன்வைத்தும் இந்த திட்டத்தை முடக்கிவைத்துள்ள அரசுகளை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் அஸ்லம்பாஷா, வாணியம்பாடியில் உள்ள இந்திராகாந்தி சிலை முன்பு வாயில் கறுப்புதுணி கட்டி ஜீலை 2ந்தேதி காலை 9 மணி முதல் உண்ணாவிரதம் அமர்ந்துள்ளார். இந்த போராட்டத்தில் நூற்றுக்கும் அதிகமான காங்கிரஸார் கலந்துக்கொண்டுள்ளனர்.
தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர்கபில் இந்த தொகுதி எம்.எல்.ஏ. இந்த நகரத்தில் தான் குடியிருந்து வருகிறார். அவரிடம் இந்த மக்களின் இந்த வேதனையை தெரிவித்தபோதும், இதுப்பற்றி அவர் பெரியதாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காங்கிரஸ் கட்சியின் இந்த போராட்டம் கட்சிகள் கடந்தும் ஆதரவு திரண்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.