புதுக்கோட்டை மாவட்டம், கலைக்குழிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 17 பெண்கள் திருச்சி சமயபுரம் மாரியம்மனுக்கு விரதமிருந்து நடை பயணம் மேற்கொண்டு கோயிலுக்கு வந்தனர். சமயபுரம் வந்த அப்பெண்கள் நேர்த்தி கடன் செலுத்திவிட்டு கலைக்குழிப்பட்டி அர்ஜூன் என்பவருக்கு சொந்தமான மினி லோடு வேனில் ஏறி ஊருக்கு திரும்பி உள்ளனர்.
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை ‘நெம்பர் 1’ டோல்கேட் அருகே உள்ள கூத்தூர் ரெயில்வே மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்த போது, ஈச்சம்பட்டி பகுதியை சேர்ந்த முகமது உசேன் (39) என்பவர் ஓட்டிவந்த கார், எதிர்பாராதவிதமாக மினி லோடு வேனின் பின்புறம் பயங்கரமாக மோதியது.
இதில் நிலைகுலைந்த மினி லோடு வேன், சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பெண் பக்தர்கள் 17 பேர் மற்றும் டிரைவர், கிளீனர் உள்பட 19 பேர் படுகாயமடைந்தனர். இதனையறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதில் கலைக்குழிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவரின் மனைவி சாந்தி (37), ரவி என்பவரின் மனைவி வசந்தி (47), ஆகியோர் மருத்துமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
ராணி(50), இந்திரா(55), செல்லம்மா(60), ரத்தினம் (50) ஆகிய 4 பெண்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.